HIV பாதிக்கப்பட்டவருக்கு வேலை வழங்கலாமா..?
எச்.ஐ.வீ நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவரை பணி நீக்கம் செய்ய முடியுமா என கேள்வி எழுப்பி ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனப் பணியாளர் ஒருவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எச்.ஐ.வீ நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட காரணத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கன் விமான சேவை பணியாளர் ஒருவர் பணி நீக்கப்பட்டுள்ளார்.
பிரதம நீதியரசர் கே.சிறிபவன் மற்றும் நீதியரசர் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் எதிரில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் மே மாதம் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
மனுதாரர் சார்பில் கமனி ஜினதாச என்ற சட்டத்தரணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், நிறுவனத்தின் வைத்திய அதிகாரி அனோமா ஜயசிங்க, போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சமரவீர, சட்ட மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மிஹின் லங்கா விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றி வந்த நபர் ஒருவர் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக விண்ணப்பம் செய்துள்ளார்.
உரிய முறையில் நேர்முகத் தேர்வு நடத்தி கடந்த ஒக்டோபர் மாதம் 28ம் திகதி நியமனக் கடிதம் குறித்த நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனை ஒன்றுக்கு உட்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட போதிலும், மருத்துவ பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெற முன்னதாக இவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், கடந்த நவம்பர் மாதம் 8ம் திகதி ஸ்ரீலங்கன் விமான சேவை நிர்வாகம், குறித்த நபரை பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து பணி நீக்குவதாக அறிவித்துள்ளது.
மருத்துவ பரிசோதனையில் சித்தியடையாத காரணத்தினால் பணி நீக்குவதாக அறிவித்துள்ளது.
எச்.ஐ.வீ நோய்த் தொற்று தாக்கப்பட்ட ஒருவருக்கு பணி வழங்கக் கூடாது என எந்தவொரு சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை என்ற அடிப்படையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment