GSP + எப்படி கிடைத்தது? விளக்குகிறார் ரணில், மைத்திரியும் உரிமை கோருகிறார்
மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தை மீள நிலையப்படுத்தியதன் மூலமே, சிறிலங்காவுக்கு மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகை கிடைத்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு கடுமையான நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்புடன் மீண்டும் ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகையை, வழங்க ஐரோப்பிய ஆணையம் முடிவு செய்துள்ளது குறித்து சிறிலங்கா பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், மனித உரிமைகள் பாதுகாப்பு, ஜனநாயகத்தை மீள்நிலைப்படுத்தல் ஆகியவற்றில் சிறிலங்கா அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றியதால் தான், ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் கிடைப்பது சாத்தியமாகியது.
இது நல்லாட்சி அரசாங்கத்தின் வெற்றி மாத்திரமல்ல, நாட்டுக்கே கிடைத்துள்ள வெற்றி
ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் கிடைத்துள்ளதன் மூலம், சிறிலங்காவின் ஆடை உற்பத்திகளும், ஏனைய உற்பத்திகளும், ஐரோப்பிய சந்தைக்குள் நுழைய முடியும். இதனால் வேலை வாய்ப்புகளும், வருமானமும் அதிகரிக்கும்.
ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும், சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.
2
2
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற முடிந்தமை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதியின் செயலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் நிகழும் ஆக்கபூர்வமான நிலைமாற்றத்தை கௌரவிக்கும் வகையில், ஐரோப்பிய ஆணைக்குழு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குமாறு பரிந்துரைத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டது. இது பற்றி ஜேர்மன் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன்போது, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் கிடைக்க வழி செய்யப்போவதாக ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மேக்கல் உறுதியளித்தார்.
இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி, நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்த முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு இந்த வரிச்சலுகை வலுவான சக்தியாக அமையும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment