முள்வேலி ஊடாக விமானத்துக்குச்சென்ற, சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள்
தமிழ்நாட்டில் ஏறு தழுவுதல் (ஜல்லிக்காட்டு) தடைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தினால், மதுரையில் சிறிலங்கன் விமானசேவை விமானிகளும், பணியாளர்களும் முள்வேலிகளைக் கடந்து விமானத்துக்குச் செல்லும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏறு தழுவுதல் தடைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் போது, சிறிலங்கன் விமான சேவை பணியாளர்களால், மதுரை விமான நிலையத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், விமானிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள், அதிகாரிகள், பற்றைகள் நிறைந்த பகுதி ஊடாகச் சென்று, முள்வேலி ஒன்றின் ஊடாக, விமான நிலையத்துக்குள் நுழைந்தனர்.
இந்தக் காட்சி அடங்கிய காணொளி இணையத்தில் பரவியுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கன் விமான சேவை அதிகாரி ஒருவர், விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்ட பின்னரே, இவ்வாறு முள்வேலியைக் கடந்து சிறிலங்கன் விமான சேவை பணியாளர்கள் தமது விமானத்தை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
“போராட்டக்காரர்கள் வீதிகளைத் தடை செய்திருந்தனர். மதுரை விமான நிலையம் மிகச் சிறியது. அதனைச் சுற்றி போராட்டக்காரர்கள் இருந்தனர்.
திட்டமிட்ட நேரத்தில் பயணிகளுக்கு சேவையாற்ற வேண்டியிருந்ததால், மாற்று வழியில் விமானப் பணிப்பெண்கள் மற்றும் அதிகாரிகள் விமானத்தை அடைய வேண்டியிருந்தது” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
Post a Comment