Header Ads



'மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏறமாட்டேன்'' - கருணா

தாம் எந்தச் சூழ்நிலையிலும் ஐதேகவுடனோ, அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனோ இணைந்து செயற்படமாட்டேன் என்று எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 2004இல் பிரிந்து சென்று ஐதேக அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருந்த கருணா, பின்னர் மகிந்த அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.

மகிந்த ராஜபக்ச பதவியிழந்த பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து கருணா நீக்கப்பட்டிருந்தார்.

அதற்குப் பின்னர் முதல் முறையாக, கடந்த 27ஆம் நாள் நுகேகொடவில் நடந்த மகிந்த ராஜபக்சவின் பேரணியில் கருணா பங்கேற்று, தற்போதைய அரசாங்கத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கடுமையாக விமர்சித்து உரையாற்றியிருந்தார்.

விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பை அழித்த தலைவர் மகிந்த ராஜபக்சவே என்றும் அவர் புகழ்ந்துரைத்திருந்தார்.

இந்த நிலையில், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

‘எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட முடிவு செய்தால், மகிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழேயே செயற்படுவேன். வேறெவரின் கீழும் அரசியல் செய்யமாட்டேன்.

எந்தச் சூழ்நிலையிலும் ஐதேகவுடனோ, அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனோ இணைந்து செயற்படமாட்டேன்.

நாட்டின் பொருளாதாரமும், பாதுகாப்பும் முன்னொரு போதும் இல்லாதளவுக்கு தற்போது மோசமடைந்துள்ளது.

பல அமைச்சர்கள் என்னை அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டனர். ஆனால் நான் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏற மாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.