Header Ads



இனவாதிகளுக்கு ஜனாதிபதி ஆதரவளிப்பது, பெரும் ஆபத்தாகும் - அப்துர் ரஹ்மான்

'இனவாதிகளுக்கு மஹிந்த அரசாங்கம் மறைமுகமாக வழங்கிய ஆதரவினை மைத்திரியின் அரசு தற்போது வெளிப்படையாக வழங்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த போக்கு நல்லாட்சி அரசிற்காக வாக்களித்த எல்லோரையும் பெரும் ஏமாற்றமடையச் செய்திருக்கிறது' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

"இனவாதிகளின் நடவடிக்கைகளை அங்கீகரித்து ஒத்துழைக்கும் வகையில் மைத்திரி தலைமையிலான அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இன ஐக்கியத்தையும் சக வாழ்வையும் விரும்பும் அத்தனை பேரையும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த மக்கள் இந்த அரசாங்கத்திடம் பல முக்கிய விடயங்களை எதிர்பார்த்தார்கள். அதில் இரண்டு விடயங்கள் பிரதானமானவை. சட்டம் ஒழுங்கினை பாரபட்சமின்றி நிலை நாட்டி, ஊழல் மோசடிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் பிரதான எதிர்பார்ப்புகளுக்கு  ஒன்றாக இருந்தது. இந்த விடயத்தில் தனது கடமையினைச் செய்வதற்கு இந்த அரசாங்கம் படு மோசமாக தவறியிருக்கிறது. நாட்டின் சொத்துக்களைக் கொள்ளையடித்தவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை அரசியல் பேரம் பேசலுக்கான ஒன்றாகவே இந்த அரசாங்கம் பயன்படுத்தியிருக்கிறது.

ஊழல் பேர்வழிகளைத் தண்டித்து அவர்களை ஒதுக்கி நாட்டை சுத்தப்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கம் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களைப் பயன்படுத்தி தத்தமது கட்சிகளை பலப்படுத்தவே முயற்சிக்கின்றது. இதன் காரணமாகவே சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டிய பல பேர் அரசியல் சன்மானங்களும் அதிகாரங்களும் வழங்கப்பட்டு சுதந்திரமாக உலாவ விடப்பட்டுள்ளனர். நல்லாட்சியை எதிர்பார்த்த மக்களுக்கு இது பாரிய ஏமாற்றமாகும்.

அது போலவேதான் இனவாத சக்திகளின் விடயத்தில் இந்த அரசாங்கத்தின் போக்கு பாரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. அப்பட்டமான இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் தயங்குவது வெளிப்படையாக தெரிகின்றது. மாத்திரமின்றி அவர்களின் படு பொய்யான இனவாதக் கருத்துக்களையெல்லாம் கணக்கிலெடுத்து அவர்களின் நோக்கங்களையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறது.

சட்டத்தை மீறி, வன்முறைகளைத்தூண்டி , அரச அதிகாரிகளையும் அச்சுறுத்தியவர்களை அவர்களின் காலடிகளுக்கே தேடிச் சென்று கலந்துரையாடி அவர்களின்  செயற்பாடுகளை நியாயப்படுத்தும் அறிக்கைகளை இந்த நாட்டின் நீதியமைச்சரே செய்யும் போது மக்கள் யாரிடம் நீதியை எதிர்பார்க்க முடியும்.  

அது போலவே, இனவாதிகளின் நோக்கங்களை நிறைவு செய்யும் வகையில் ஜனாதிபதியின் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. வனவளங்களைப் பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் முஸ்லிம்களின் பூர்வீகக் குடியிருப்புக்களை இல்லாமல் செய்யக்கூடிய வர்த்தமான அறிவித்தல்களை செய்யப் போவதாக  ஜனாதிபதி அறிவித்திருப்பதானது  ஏமாற்றத்தையும் அதர்ச்சியையும் தருகிறது. குறிப்பாக,  மன்னார்- முசலிப் பிரதேசத்தில் பல்வேறு கிராமங்களில்  முஸ்லிம் மக்கள்  பூர்வீகமாக நெடுங்காலமாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். 100 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட காணி உறுதிப்பத்திரங்கள் அவர்களிடம் இருக்கிறது.  இந்நிலையில் யுத்தத்தின் பின்னர் மீளக் குடியேறிய அம்மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை இனவாதிகள் மிக நீண்ட காலமாக மேற்கொண்டு வந்தனர். அவர்களின் நோக்கங்களை மிக இலகுவாக நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில் ஜனாதிபதியின் இந்தத் தீர்மானம் அமைந்திருக்கிறது. 

அதுபோலவே முஸ்லிம்களுக்குச் சொந்தமான, பல தசாப்தங்கள் பழமைவாய்ந்த மத பாரம்பரிய கலாசார தளங்களை இல்லாதொழிப்பதற்கான செயற்பாடுகளும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொல் பொருள் பாதுகாப்பு என்கின்ற போலியான காரணம் இதற்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்நாட்டின் பூர்வீக வரலாற்றில் இருந்து முஸ்லிம்களை அந்நியப்படுத்துவதென்பது இனவாத சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் பிரதான ஒன்றாக இருந்து வந்துள்ளது. அதனை நிறைவு செய்து கொடுக்கும் வகையில் தற்போதைய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இந்த விடயங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கின்ற போது ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

மஹிந்த அரசு இனவாத சக்திகளுக்கு மறைமுகமாக வழங்கிய ஆதரவினை மைத்திரி தலைமையிலான அரசு தற்போது வெளிப்படையாக செய்ய முனைகிறது. இது நாட்டினது முழு எதிர்காலத்திற்கும் இது பெரும் ஆபத்தாகும்.  குறுங்கால அரசியல் இலாபங்களுக்காக இனவாத சக்திகளை அரவணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மைத்திரி அரசு ஒன்றை மறந்துவிடக்கூடாது.

அதாவது இனவாதம், மொழிவாதம் மற்றம் பிரிவினை வாதம் என்பவற்றை இந்நாட்டில் தமது அரசியல் நோக்கங்ளுக்காக முன்னெடுத்தவர்கள் யாவரும் இறுதியில் தோல்வியையே சந்தித்தார்கள். மஹிந்தவின் தோல்வி அதற்கான மிக அண்மைய உதாரணமாகும். ஆட்சி மாற்றத்திற்காக மக்கள் வாக்களித்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் இத்தருணத்தில் மக்கள் ஏன் மஹிந்தவை தோற்கடித்தார்கள் என்பதனையும் ஏன் மைத்திரிக்காக ஆதரவு வழங்கினார்கள் என்பதனையும் மீட்டிப் பார்த்து தமது நடவடிக்கைகளை மீள்பரிசீலனைக்கு உட்படுத்த  அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும்."

1 comment:

  1. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
    (அல்குர்ஆன் : 9:24)

    ReplyDelete

Powered by Blogger.