முஸ்லிம் காணியில் புத்தர் சிலை அகற்றப்படுமா..?
-ARA.Fareel-
கௌதம புத்தர் கருணையையும் அன்பையுமே போதித்தார். வன்முறைகளையும் வன்செயல்களையும் கண்டித்தார். ஆனால் பௌத்த நாடான இலங்கையில் புத்தரின் சிலை பலாத்காரத்துக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றமை வேதனையளிக்கின்றது. புத்தர் அரச மரத்தின் நிழலிலே அதன் அடியில் பரிநிர்வாணமானார். இதனாலோ என்னவோ நாட்டின் பல பாகங்களிலும் அரச மரங்களுக்கு அருகே அதன் அடியில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. தற்போது இந் நிலையில் சிறிது மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அண்மைக்கால சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.
குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. மதவாதிகள் இச்செயற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மாணிக்கமடு பகுதி மலையில் வெறும் கற்தரையில் அண்மையில் புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டதை நாமனைவரும் அறிவோம்.
இதில் ஒரு விஷேடம் என்னவென்றால் அப்பகுதியில் சிங்களக் குடும்பம் ஒன்றேனும் வாழவில்லை. அப்படியென்றால் ஏன் அங்கு புத்தர்சிலை? இதை நாம் தூர நோக்கோடு சிந்திக்க வேண்டும். பெரும்பான்மை இனத்தவர்கள் அப்பகுதியை தங்களுக்குச் சொந்தமானது என உரிமை கொண்டாடுவதற்கே இந்த நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டுவருகின்றன எனலாம்.
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் புத்தர்சிலைகளை நிறுவி வந்தவர்களின் கவனம் தற்போது கண்டிப் பகுதியை நோக்கித் திரும்பியிருக்கிறது. கடந்த 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுபஹு தொழுகைக்காக எழும்பிய நிவ்எல்பிட்டிய கிராமத்தைச் சேர்ந்த எச்.எம்.நிஸ்தார் தனது வீட்டுக்கு முன்னால் சிறிது தூரத்தில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். வெறுமனே இருந்த காணியில் ஓர் புத்தர் சிலை. அவரால் நம்பவே முடியவில்லை.
கடந்த 21 ஆம் திகதி சனிக்கிழமை இரவு அங்கே புத்தர் சிலையொன்று பெரும்பான்மை இனத்தவர்களால் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நிவ்எல்பிட்டிய கிராமமெங்கும் பரவியது. அயல் கிராமங்களுக்கும் தகவல் அறிவிக்கப்பட்டது. அவ்விடத்துக்கு முஸ்லிம்கள் ஒன்று கூடினார்கள். பெரும்பான்மை இனத்தவர்களும் ஒன்று கூடியிருந்தனர்.
பேராதனை பொலிஸ் நிலையத்துக்கும் சம்பவம் அறிவிக்கப்பட்டது. காணி உரிமையாளரினால் பேராதனை பொலிஸில் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டது. மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் லாபிர் ஹாஜியர், ஹிதாயத் சத்தார் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டதுடன் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீக்கும் அறிவிக்கப்பட்டது.
காணி உரிமையாளர் எச்.எம்.நிஸ்தார்
சிலை வைக்கப்பட்டிருக்கும் காணியின் உரிமையாளர் எச்.எம்.நிஸ்தார் காணி தொடர்பான விபரங்களை பின்வருமாறு விளக்கினார்.
இந்தக் காணி 40 பர்ச் ஆகும். 1947 ஆம் ஆண்டு முதல் எங்கள் குடும்பம் இக்காணியை பராமரித்து வருகிறது. எனது வாப்பாவுக்குப் பின்பு தற்போது நான் இக்காணியில் இருக்கிறேன். இந்தக் காணிக்கான உறுதி எனது பெயரில் இருக்கிறது. இது 1954 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் வழங்கப்பட்ட சுவர்ணபூமி காணி உறுதியாகும். தக்கியா இவ்விடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஜும்ஆ பள்ளிவாசல் ஒன்றும் இருக்கிறது.
இப்பகுதியில் 100 வீதம் முஸ்லிம்களே வாழ்கிறார்கள். இப்பகுதியிலுள்ள பன்சலை அரை கிலோ மீட்டருக்கு அப்பாலே இருக்கிறது. எனது காணியிலுள்ள வீட்டுக்கு முன்னால் 1 1/2 மீட்டர் தூரத்திலே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. நான் இந்தக் காணிக்கு பல தசாப்தங்களாக வரி செலுத்தி வருகிறேன். அவ்விடத்தில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளமை எனது குடும்பம் உட்பட ஏனைய முஸ்லிம்களையும் பாதிக்கும். ஏனென்றால் நூறு வீதம் முஸ்லிம்கள் இங்குள்ளனர். இதனால் எமது இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும்.
இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகம் பெரும்பான்மைத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தைகள் மூலம் இவ்விவகாரத்தை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறோம். எமது பள்ளிவாசலில் எம்மவர்களுக்கும் பன்சலையில் அவர்களுக்கும் பேச்சுவார்த்தைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். இந்தப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும் வரை பொலிஸ் பாதுகாப்பு கோரியுள்ளேன். பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும் என இறைவனிடம் துஆ கேட்கும்படி அனைத்து முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கிறேன் என்றார்.
சிலை அகற்றப்படுமா?
ஓரிடத்தில் வைக்கப்பட்ட புத்த சிலையை பெரும்பான்மை மக்கள் அகற்றிக் கொள்ள உடன்படுவார்களா? என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. பொலிஸார் அந்தச் சிலையை அகற்றி விடுவார்கள் என்று சம்பந்தப்பட்ட தினம் சுமார் 200 பெரும்பான்மையினத் தலைவர்கள் புத்தர் சிலையைப் பாதுகாத்துள்ளமையை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தொடர்ந்து அரசியல் மட்டத்திலும் மதத் தலைவர்கள் மட்டத்திலும் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எல்லாம் நல்லபடி நடக்க வேண்டும். சிலை விவகாரத்தால் இன நல்லிணக்கமும் இனங்களுக்கிடையில் நல்லுறவும் சிதைந்துவிடக்கூடாது. காணி உரிமையாளர் கூறியது போன்று நாமனைவரும் சமூகத்துக்காக துஆ செய்வோம்.
Post a Comment