Header Ads



ஒபாமா, உங்களைக் கண்காணிக்கலாம்..!

ஆண்டிப்பட்டியில் இருக்கும் அந்தோணி என்கிற விவசாயி பற்றி அமெரிக்க ஜனாதிபதிக்குத் தெரிந்திருக்க... அந்தோணி, அவரிடம் அறிமுகம் ஆகியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்சம் அந்தோணியின் கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். ஆனால், அந்தோணியைப் பற்றி அமெரிக்க அதிபர் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? இதே கேள்விதான், அந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியின் எட்வார்ட் ஸ்னோடன் பில்லியன் கணக்கிலான அமெரிக்கர்களை, அவர்களது செல்போன் வழியாக ஏஜென்சி கண்காணித்தது என்கிற செய்தியை வெளியட்டபோதும் எழுந்தது. அமெரிக்காவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிஸான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கஸ்டமர்கள் பற்றிய தகவல்களைத் தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியிடம் பகிர்ந்துவந்தது, எட்வர்ட் ஸ்னோடன் வழியாக அம்பலமானது. இது மட்டுமல்லாமல், அந்த ஏஜென்சி... பல்வேறு வகைகளில் பொதுமக்களின் சமூகத் தொடர்புகள் மற்றும் 122 நாட்டுத் தலைவர்களின் தொடர்புகளையும் கண்காணித்து வந்ததும் தெரியவந்தது.

‘‘மொபைலின் சிம் கார்டு, மெமரி கார்டு, கேமரா, மைக்ரோபோன் அதேபோல மடிக்கணினியின் கேமரா, மைக்ரோபோன் உள்ளிட்டவை நம்மைக் கண்காணிக்க நேரடியாக உபயோகப்படுத்தப்படும் மீடியம்கள். இது தவிர்த்து, நம்முடைய இன்னும் தனிப்பட்ட பெர்சனல் பக்கங்களைத் திருடி எடுக்க குறைந்தபட்சம் நமது பெயரே போதுமானதாக இருக்கிறது. நாம் உபயோகிக்கும் மொபைல்கள் பெரும்பாலும் பாதுகாப்பு மேம்படுத்தப்படாத சி.டி.எம்.ஏ மற்றும் ஜி.எஸ்.எம் மாடல் வகையறாக்கள். அதில். நாம் பேசுவதை எளிதில் ஒட்டுக்கேட்டுவிட முடியும். அதைவிட, ஆபத்தானவை நம்மிடம் இருக்கும் ஆண்ட்ராய்டு வகையறா ஸ்மார்ட்போன்கள். கூகுளின் மெயில், ட்ரைவ், முகநூல், ட்விட்டர் தொடங்கி அத்தனையும் அதிலேயே ஒருங்கிணைத்து இருப்பதால் நம்மைப் பற்றித் தகவல் அறிய ஹேக் செய்வது இன்னும் எளிது. அதனால் நமது ஸ்மார்ட்போன்களை என்க்ரிப்ட் செய்வது அவசியம். வாட்ஸ் அப் போன்ற தகவல் பரிமாற்றத் தளங்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டது என்று கூறப்பட்டாலும் அது நம்பகத்தன்மையுடைய தகவல் இல்லை. அதற்குப் பதிலாக SIGNAL போன்ற தகவல் பரிமாற்ற மென்பொருள் சாதனங்களை உபயோகிக்கலாம்’’ என்று அறிவுறுத்துகிறார் யோகேஷ். 

‘‘நம் கணினிகளுக்கு WINDOWS இயங்குதளத்தை உபயோகிக்கக் கூடாது’’ என்பதுதான் யோகேஷ் கூறும் முதன்மையான் அறிவுரை. Linux போன்ற பாதுகாப்புக் கட்டமைப்புள்ள ஆபரேடிங் சிஸ்டம் உபயோகிக்கப் பரிந்துரைக்கிறார். 

அண்மையில் பிரபல ஊடகவியலாளர் பர்காதத்தின் மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டது நினைவில் இருக்கலாம். ஜெயலலிதாவின் இறப்புப் பற்றிய தகவலை, ஹேக் செய்தவர்கள் வெளியிட்டிருந்தார்கள். பிரபல ஊடகவியலாளருக்கே இங்கே இணையத்தில் பாதுகாப்பற்றச் சூழல் என்றால், தனிநபர்களின் பாதுகாப்பு இன்னும் தொடக்கப்புள்ளியில்கூடச் சிந்திக்கப்படவில்லை என்பதே உண்மை. பெரும் ஊடக நிறுவனங்களே தங்களது மின்னஞ்சலைப் பாதுகாக்கத் தவறிவிட்டதா என்கிற கேள்வியும் எழுகிறது. அதே சமயம், ஊடகத்துறை சார்ந்த மற்ற நபர்களும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கை அலாரத்தை அனைவருக்குள்ளும் ஒலிக்கச் செய்கிறது. 15 ஜி.பி-க்கள் வரை நமக்கு இலவசமாகத் தரும் ஜிமெயில் போன்ற மின்னஞ்சல் சேவையை எளிதில் ஹேக் செய்துவிடமுடியும். அதே சமயம், இதுவரை நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்காத ‘Tutanote’ மற்றும் ‘Protonmail’ உள்ளிட்டவை எதிராளி ஹேக் செய்ய முடியாதவகையில் பாதுகாப்பானவை. இவற்றை ஹேக் செய்ய எதிராளி முக்கியமாகக் கருதும் ஆயுதம் நமது பாஸ்வோர்டு.

 நாம், நமது கணினிக்கோ அல்லது மின்னஞ்சலுக்கோ தரும் பாஸ்வேர்டு குறைந்தபட்சம் எட்டு எழுத்துருக்களும்... அதிகபட்சம் 10 அல்லது 16 எழுத்துருக்களும் இருக்கும். ஆனால், குறைந்தபட்சம் எவ்வளவு எழுத்துருக்கள் நமது பாஸ்வேர்டுக்கு இருக்க வேண்டும் தெரியுமா? 34 என்றால் ஆச்சர்யப்படுவீர்கள். அதுவும் நமக்குத் தொடர்பில்லாத பெர்சனல் தகவல்கள் இல்லாத பாஸ்வேர்டாக இருப்பது உத்தமம். உங்களுக்குப் பிடித்த பாடல் வரி, புத்தகத்தின் பக்கங்களில் கண்கள் சட்டென நிலைத்துவிடும் ஏதோ ஒரு வரி என எதுவாகவும் இருக்கலாம் அல்லது அவற்றை யோசிப்பது கடினமாக இருக்கிறதா? நமக்கான பாஸ்வேர்டினை, தானே உருவாக்கித் தரும் KeepassX உள்ளிட்ட மென்பொருட்களை உபயோகிக்கலாம்.

தானே பாஸ்வேர்டு உருவாக்குவது மட்டுமில்லாமல், அதனைப் பத்திரப்படுத்தவும் உதவுகிறது இந்த மென்பொருள். அதுபோலவே நாம் அதிகம் பயன்படுத்தும் அத்தனை சாஃப்ட்வேர்களுக்கும் ‘நோ’ சொல்லிவிட்டுப் பாதுகாப்புக் கட்டமைப்புள்ள, அதிகம் விளம்பரப்படுத்தப்படாத சாஃப்ட்வேர்களைப் பரிந்துரைக்கிறார், யோகேஷ். வீடியோ தொடர்புக்கு ஸ்கைப்புக்குப் பதிலாக மீட் ஜிட் எனப்படும் மென்பொருள்; க்ரோம் அல்லது மொசில்லாவுக்குப் பதிலாக டார்; எலெக்ட்ரானிக் உலகில் நமக்கான பாதுகாப்புக்கான நடமாட்டத்துக்கு இத்தனையையும் பரிந்துரைக்கிறார், அவர். மேலும் விரல் ரேகை, கண் விழி உள்ளிட்டவற்றை பயோமெட்ரிக் பாஸ்வேர்டாக உபயோகிப்பதும் ஒருவகையில் ஆபத்தே. கைவிரல் ரேகை திருடப்பட்டால் நிமிட நேரத்தில் யாரோ ஒருவர், நீங்களாக மாறலாம். 

இவ்வளவும் படித்தபின் நாம் இத்தனை பாதுகாப்பற்றச் சூழலில் இருக்கிறோமோ, என்கிற அதிர்ச்சியும் அயர்ச்சியும் நிச்சயம் உங்களுக்குள் எழலாம். ஆனால், இணையம் சூழ் உலகில் இன்றைய நிலை இதுதான். உங்களின் அந்தரங்கம் தொடங்கி பொதுவெளியில் உங்கள் ஒற்றைக் கண் அசைவைக்கூட இன்டர்நெட் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது. இணையமற்ற உலகம் என்கிற நிலையை ஏற்படுத்திவிட்டால் இதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்தால், அது தவறு. உதாரணத்துக்கு, உங்கள் முகநூல் பக்கத்தை அழித்தால் உங்களது மொத்தக் கணக்குகளும் அழிந்துவிடும் என்கிற அர்த்தமில்லை. உங்களைப் பற்றிய தகவல்கள் முகநூல் அலுவலகத்தின் தகவல் சேமிப்புக் கிடங்கில் அப்படியேதான் இருக்கும். ஒருமுறை நுழைந்துவிட்டால், மீளமுடியாத சக்கரவியூகம்தான் இந்த இணையம். 

அடுத்த முறை புது போன் வாங்குவதற்கு முன்பும்... உங்கள் மடிகணினியைத் திறப்பதற்கு முன்பும் இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளவும். நீங்களே அறியாமல்... உங்களைக் குற்றவாளி ஆக்கும் வல்லமை இணையத்துக்கு உண்டு.  

No comments

Powered by Blogger.