Header Ads



எர்துகானிடம் குவியும் அதிகாரங்கள், பாராளுமன்ற அங்கீகாரமும் கிடைத்தது


ஜனாதிபதி ரசப் தையிப் எர்துவானுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் புதிய அரசியலமைப்புக்கு துருக்கி பாராளுமன்றத்தில் பூர்வாங்க அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இவ்வார இறுதியில் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு இடம்பெறவிருப்பதோடு அதில் ஆதரவாக வாக்கு கிடைத்தால், புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்.

எனினும் எர்துவானுக்கு வழங்கப்படும் அதிக அதிகாரங்கள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த அரசியலமைப்பு மாற்றம் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை ஒத்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பின்படி அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. துருக்கி வரலாற்றில் முதல் முறை பிரதமர் பதவி அகற்றப்படுகிறது. பதிலாக குறைந்தது ஒரு துணை ஜனாதிபதி நியமிக்கப்படுவார்.

ஆளும் ஏ.கே கட்சி தேவைப்படும் ஐந்தில் மூன்று பெரும்பான்மையை பெற்றதை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சட்ட வரைவின் இறுதி கட்டுரைகள் நிறைவேற்றப்பட்டன.

எனினும் அரசியலமைப்பை மாற்றும் விவாதங்கள் சூடாக இடம்பெற்றன. விவாதம் அமர்வொன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பை எம்.பி ஒருவர் வீடியோ எடுத்ததை அடுத்து கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஏ.கே கட்சியனருக்கும் மக்கள் குடியரசு கட்சியினருக்கு மோதல் இடம்பெற்றது.

பிரதான எதிர்க்கட்சியான சி.எச்.பி இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. குர்திஷ் ஆதரவு மக்கள் ஜனநாயக கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது. குர்திஷ் பிரிவினைவாத போராளிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் அந்த கட்சியின் பல எம்.பிக்களும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் ஏ.கே கட்சிக்கு ஆதரவாக நான்காவது அதிக பிரதிநிதிகளைக் கொண்ட வலதுசாரி தேசிய இயக்க கட்சி புதிய அரசியலமைப்புக்கு வாக்களித்துள்ளது.

கடந்த ஜூலையில் இராணுவ சதிப்புரட்சி ஒன்று முறியடிக்கப்பட்டதை அடுத்து துருக்கியில் அவசர கால நிலை தொடர்ந்து அமுலில் உள்ளது. புதிய அரசியலமைப்பு அவசர கால நிலையை பிரகடனம் செய்யவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்குகிறது.

62 வயதான எர்துவான் ஏ.கே கட்சியை நிறுவிய அடுத்த ஆண்டிலேயே, 2003இல் ஆட்சிக்கு வந்தார். 11 ஆண்டுகள் பிரதமராக இருந்த அவர் முதல் முறை மக்களின் வாக்கு மூலம் தேர்வான ஜனாதிபதியாக 2014ஆம் ஆண்டு பதவி ஏற்றார். துருக்கியில் ஜனாதிபதி பதவி அதிகாரமற்ற பதவியாகவே இருந்து வருகிறது. 

No comments

Powered by Blogger.