ரஞ்சன் ராமநாயக்க, மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை - மரிக்கார்
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் திவுலப்பிட்டிய பிரதேச செயலாளருக்குமிடையில் நிலவி வரும் சர்ச்சை தொடர்பில் பிரதி அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லையென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்தார்.
சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியாயத்தை தட்டிக் கேட்டுள்ளாரே தவிர சட்டத்துக்கு முரணாக செயற்படவில்லை என்ற காரணத்தினால் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் எட்டு வருடங்களாக ஒரே இடத்தில் பதவி வகிக்கும் குறித்த பிரதேச செயலாளர் இடமாற்றம் செய்யப்படல் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே எஸ்.எம் மரிக்கார் எம்.பி இவ்வாறு கூறினார்.
அரசாங்க அதிகாரியை குறிப்பாக ஒரு பெண்ணை நான் குறைவாக எடை போடவில்லை. பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பெண் அதிகாரியுடன் பேசிய தொனி தவறாக இருந்தபோதும் அதன் உள்ளடக்கத்தில் தவறு இல்லை.
பிரதி அமைச்சர் கடுமையான தொனியில் பேசுவதற்கும் பிரதேச செயலாளரே காரணம். பிரதி அமைச்சரின் கேள்விகளுக்கு பிரதேச செயலாளர் பதிலளித்த முறைக் காரணமாகவே பிரதி அமைச்சரின் தொனி கடுமையானது.பிரதி அமைச்சர் மன்னிப்புக் கோருவதற்கு முன்பாக எட்டு வருடங்களாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் பிரதேச செயலாளர் இடமாற்றம் செய்யப்படல் வேண்டும் என்றும் கூறினார்.
கடந்த அரசாங்கத்தில் இப்பிரதேச செயலாளர் பகுதிகளில் ஆட்சி செய்தவர்களைப் பற்றியும் அவர்களது கொடுக்கல் வாங்கல் பற்றியும் எமக்கு தெரியும். எட்டு வருடங்களாக ஒரே இடத்தில் பணியாற்றியபோதும் பிரதி அமைச்சரின் கேள்விக்கு பொறுப்பற்ற விதத்தில் பிரதேச செயலாளர் பதிலளித்தது தவறு என்றும் அவர் கூறினார்.
இதே செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த இந்துனில் துஷார எம்.பி கூறுகையில்
பெண் அதிகாரியொருவரின் மனதை புண்படுத்தியமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் எமது கட்சி சார்பிலும் நான் எனது மனப்பூர்வமான கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். கம்பஹா மாவட்டத்தில் இதே மண் பிரச்சினைக் காரணமாக கடந்த காலங்களில் 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
எனவே இதனை அவர் தட்டிக்கேட்டதில் எவ்வித தவறும் இல்லையென்றும் அவர் கூறினார். கடந்த அரசாங்கத்தில் சமுர்த்தி அதிகாரியொருவர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தார். ஆசிரியர்கள் முழங்காலில் வைக்கப்பட்டனர். தெரணியகலை பிரதேச செயலாளரின் கழுத்தை வெட்டினார்கள்.இலங்கைத் தூதுவராக இருந்த கிறிஸ் நோனிஸின் கன்னத்தில் அறைந்தார்கள். ஆனால் இங்கு அதுபோன்ற அநீதியான செயல் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.
Post a Comment