மைத்திரி - ரணில் இடையே, எவ்வித முரண்பாடுகளும் இல்லை...!!
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எவ்வித கருத்து முரண்பாடுகளும் இல்லை. இந்த அரசாங்கத்தில் தயவு தாட்சண்யத்துக்காக இடம் கொடுக்கப்பட்டவர்களே இல்லாதவொன்றை இருப்பதுபோல காட்டி மக்களை குழப்ப முயற்சிக்கின்றனரென அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த அரசாங்கம் போன்றில்லாமல் ஜனாதிபதியும் நிதி அமைச்சரும் இருவேறு நபர்களாக இருந்து அனைத்து விடயங்களையும் பாராளுமன்றத்தில் கலந்துரையாடுவதும்கூட அரசியலில் முரண்பாடுகள் இருப்பதுபோல் தோன்றினாலும் உண்மையில் அவ்வாறு இல்லை என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இல்லாமல் இருக்க முடியாது அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி இல்லாமலும் இருக்க முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.
இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர் குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க முயற்சித்தபோதும் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் பிற்போடப்படுவதே மிகவும் கவலைக்குரிய விடயமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று(23) மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.
ஐக்கியதேசியக் கட்சி கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஜனாதிபதி முன்வைத்த எந்தவொரு யோசனைக்கும் மாற்றுக் கருத்தினை முன்வைத்ததில்லை. கடந்த காலங்களில் ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும் ஒருவரே இருந்தார். அவர் தனது அம்மா, அப்பாவின் சொத்தைப் போன்று தன் விருப்பத்துக்கு இந்நாட்டின் சொத்துக்களில் தீர்மானங்களை மேற்கொண்டார். எந்தவொரு விடயமும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை.
ஆனால் இந்த அரசாங்கத்தில் நிதி அமைச்சுக்ெகன ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியும் பிரதமரும் இருவேறு கட்சியைச் சேர்ந்தவர்கள். நிதி அமைச்சரும் நாட்டின் நிதி தொடர்பான எந்தவொரு விடயத்தையும் சுயமாக முன்னெடுப்பதில்லை.
இதற்கென நியமிக்கப்பட்ட பிரதமர் தலைமையிலான விசேட குழு உள்ளது.
இக்குழுவின் தீர்மானம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படும். பின்னர் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படும்போது மக்கள் தமது எதிர்ப்பினை முன்வைப்பர். அப்போது ஜனாதிபதி தலையிட்டு முடிவை மக்களுக்கு சாதகமாக மாற்றுகின்றார். இதில் இறுதியாக ஜனநாயகமே வெல்கின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனை புரிந்துக்கொள்ள முடியாதவர்கள் அரசியலுக்குள் குழப்பம் இருப்பதாக பார்க்கின்றனர். உண்மையில் அவ்வாறு இல்லை. ஜனாதிபதியும் பிரதமரும் சிறந்த புரிந்துணர்வுடனேயே இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ தனது பதவி முடிவடைவதற்கு இரண்டு வருடங்கள் இருக்கும்போது நாட்டில் இருந்த பொருளாதார நிலையைத் தொடர முடியாது போனதற்காகவே தேர்தலுக்குச் சென்றார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்து அவர் நன்கு அறிந்து வைத்துள்ளார் என்கின்ற போதும் சீனாவுடனான ஒப்பந்தம் மூலம் மார்ச் மாதமளவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள 05 பில்லியன் டொலர் நிதியை தடுத்து நிறுத்துவதே தற்போது முன்னாள் ஜனாதிபதியின் குறிக்கோளாகவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
லக்ஷ்மி பரசுராமன்
Post a Comment