Header Ads



சிங்கள இனவாதிகள் மறைத்த, வில்பத்துவின் சோகக்கதை - பகிரங்கப்படுத்தும் ராவய

(சிங்களத்தில் ரேகா நிலுக்ஷி ஹேரத், தமிழில் - ஆதில் அலி சப்ரி)

வில்பத்து போராட்டம் குறித்து நாம் கடந்த வாரம் எழுதியிருந்தோம். வில்பத்துவில் காடழிப்பு இடம்பெறவில்லை என்றும், மனிதர்கள் வாழ்ந்துவந்த இடத்தை தவறுதலாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு உரித்தான, 30 வருடங்களாக காடாகியிருந்த நிலப்பரப்பையே அவர்கள் துப்புரவு செய்திருக்கிறார்கள் என்றும் நாம் கூறியிருந்தோம். நாம் இவ்வாறு துப்புறவு செய்யப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு கடந்தவாரம் சென்றிருந்தோம். வீடியோ, படங்களினூடாக அதிகம் காட்டப்பட்ட மரிச்சுக்கட்டிய கிராமத்துக்கே நாம் சென்றோம்.

நாம் அங்கு சென்றிறங்கியதும் மூன்று, நான்குபேர் எம்மைச் சூழ்ந்துகொண்டனர். எம்மிடம் கெமராவொன்றிருந்தது. அவர்கள் கெமராவையே உற்றுநோக்கினர். ஹிரு டீவியிலிருந்தா? என்று ஒருவர் கேட்டார். இல்லை, பத்திரிகையொன்றிலிருந்து, என்று பதிலளித்தோம். அப்படியென்றால் சரி. கோவிக்க வேண்டாம் தங்கையே! ஊடகங்களுடன் எமக்கு எவ்வித கோபமுமில்லை. ஹிரு டீவி வருவதற்கு நாம் விருப்பமில்லை. அவர்கள் வந்தால் தயவுசெய்து சென்று விடும்படி நாம் கூறிவிடுவோம்- என்றனர். நாம் அங்கு சென்ற நோக்கத்தை அவர்களிடம் தெளிவுபடுத்தினோம். நாம் உண்மைகளைக் கண்டறிந்து எழுதவே இங்கு வந்தோம். நீங்கள் சட்டவிரோத குடியேற்றங்களில் வாழ்ந்து வருபவர்கள் இல்லை என்பதை நாம் கண்டறிந்து, நிரூபிக்க எங்களுக்கு உதவுங்கள்- என்ற வேண்டுகோளை விடுத்தோம்.

எம்மோடு முதலில் கதைத்தது மஹ்ரூப் ஹில்மி எனும் இளைஞன். நாம் காடொன்றை அழித்து இன்பம் அனுபவிக்கிறோம் என்று நினைக்கின்றீர்களா? நான் எனது வீட்டை உங்களுக்கு தருகி றேன். நாம் அனுபவிக்கும் துன்பத்தை ஒரு வாரம் தங்கிநின்று பாருங்கள். கொழும்பில் நிம்மதியாக இருந்துகொண்டு, ஊடக கலந்துரையாடல்களை நடத்துபவர்கள் நாம் அனுபவித்துவரும் துன்பத்தை உணரமாட்டார்கள். நானும் மனைவியும் குழந்தைகள் இருவரும் வசித்து வருகிறோம். நான் சட்டவிரோதமாக செயற்பட்டு, சிறைக்குச் சென்றால் என் குடும்பத்தைப் பராமரிப்பது யார்? நான் சட்டத்திற்கெதிராக செயற்படுபவனல்ல. கஷ்டங்களுக்கு முகங்கொடுக்கின்றபோதும், சட்டங்களுக்கு கட்டுப்பட்டே வாழ முயற்சிக்கின்றோம்- என்றான் ஹில்மி. 
மொஹம்மத் ராபி 12 வயதில் புத்தளத்திற்கு இடம்பெயர்ந்தவர். அவர் பயின்றதும் புத்தளத்திலேயே. இப்போது ராபி, புத்தளத்திலிருந்து மரிச்சுகட்டிக்கு வந்து, விவசாயம் மற்றும் முச்சக்கரவண்டி சாரதியாக தொழில்புரிந்து வருகிறார். மரிச்சுகட்டியில் போதிய பாடசாலை வசதிகள் இல்லாத காரணத்தினால் மனைவி, குழந்தைகளை தொடர்ந்தும் புத்தளத்திலே தங்கவைத்துள்ளார். மரிச்சுகட்டியில் வாழ்க்கையை ஆரம்பிப்பதே அவரது எதிர்பார்ப்பாகும். ராபி அவரது முச்சக்கர வண்டியில் எம்மை ஊரைச் சுற்றிக் காட்டினார். எமது கையிலிருந்த கெமராவைக் கண்ட சிறார்கள் ஹிரு ஹிரு என்றவண்ணம் ஓடியொழிந்தனர். கெமரா என்பது, பசியால் வாடுகின்றவர்களின் இருப்பிடங்களையும் இல்லாது செய்யும் கொடிய ஆயுதம் என்ற பதிவை சிறார்களின் உள்ளத்திலும் ஏற்படுத்தியிருந்தது.
  
இந்த பிரதேசத்தில் வசிக்கின்ற முஸ்லிம்கள் தெற்கிலிருந்து வருபவர்களை அனுமதிப்பதில்லை என்ற பதிவே தெற்கில் உள்ளவர்களிடம் உள்ளது. எனினும் நாம் அவ்வாறானவர்களல்ல. தெற்கின் கனவு முஸ்லிம் கிராமமே அது. இங்கு ஆயுதங்களை பதுக்கிவைத்திருக்கும் முஸ்லிம்களே இருக்கிறார்கள் என்ற மாயைகளைப் பரப்புவோரும் தெற்கில் உள்ளனர். அவ்வாறானவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டுகொள்ளவில்லை. நாம் சந்தித்ததெல்லாமே கஷ்டமான வாழ்க்கையை அனுபவித்துவரும்
சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ ஏழை மனிதர்களை மாத்திரமே. இலங்கை முஸ்லிம் குடியிருப்பொன்றாக மாற்றுவது போன்ற செயற்பாடுகளுக்கு அவர்களிடம் நேரமிருக்கவில்லை. மரங்களை தரித்து, வாகனங்களில் ஏற்றும் வேலைப்பழுமிக்க முஸ்லிம்களாக தெற்கில் சித்தரிக்கப்படுவதற்கு, நேரெதிரானவர்களே இவர்கள்.
விவசாயத்தை அடிப்படையாக கொண்ட, வறியவர்களையே நாம் சந்தித்தோம். வரட்சியால் இவர்களின் துன்பம் மேலும் அதிகரித்துள்ளது. அருந்துவதற்கு நீரும், உண்ணுவதற்கு உணவும் இன்றி இம்மக்கள் துன்பத்தில் வாடுகின்றனர்.
ராபி மற்றும் முஹம்மத் காமில் எம்மை அழைத்துச் சென்று பாழடைந்து போன பாடசாலைக் கட்டடங்கள், பள்ளிவாசல்களைக் காட்டினர். வன பாதுகாப்பு திணைக்களம் விதித்துள்ள கிராம எல்லையையும் பார்த்தோம். காட்டு எல்லையினுள் எவ்வித காடழிப்பும் இடம்பெறவில்லை என்பதையும், மனிதர்களுக்கு உரித்தான காணிகளில் வன எல்லை ஆக்கிரமித்திருப்பதையும் நாம் பார்வையிட்டோம். பழைய மையவாடியையும் வன பாதுகாப்பு திணைக்களம் வன எல்லையினுள் ஆக்கிரமித்திருப்பதையும், மையவாடியில் அடக்கஸ்தளங்களில் நடப்பட்டிருந்த பலகைகள், தினக்குறிப்புகளையும் அவ்விருவரும் எமக்கு காட்டினர்.
   
புலிகளின் தீர்மானமொன்று காரணமாகவே இந்த மக்களுக்கு பூர்வீகத்தை விட்டுச் செல்லவேண்டிய நிலையேற்பட்டது. முஸ்லிம்கள் தம் இருப்புகளில் இருந்து வெளியேற்றும் புலிகளின் தீர்மானத்தைத் தொடர்ந்து அவர்கள் முகங்கொடுத்த கஷ்டங்களை மெஹர்ஜான் இவ்வாறு தெளிவுபடுத்துகின்றார். எங்களுக்கு 24 மணித்தியாலங்களில் இந்த கிராமத்தை விட்டுச் செல்ல வேண்டுமென்று புலிகள் அறிவித்ததும், கையில் கிடைத்தவற்றை சொப்பின் பைகளில் போட்டுக்கொண்டு நடையாக பாதையில் சென்றோம். சிலர் பாதணிகளும் இன்றியிருந்தனர். நான் 1954ஆம் ஆண்டு இந்த கிராமத்தில் பிறந்தேன். நான் அறிந்த காலம் தொட்டே இந்த பள்ளிவாயல் இங்கிருந்தது. விடுதலைப் புலிகள் எம்மை விரட்டியதும் நான் எனது மூன்று குழந்தைகளுடன் உயிரைக் காத்துக்கொள்ளும் நோக்கிலேயே இங்கிருந்து வெளியேறி னேன்.

மஹரூப் ஹில்மி

ஹில்மியின் கதை அகோரமானது. இவர் 30 வயது நிரம்பிய இளைஞராவார். நான் எங்கு செல்ல? இங்குதானே வாழவேண்டும். சிங்கள மற்றும் தமிழர்கள் யுத்தம் செய்தார்கள். ஒதுங்கியிருந்த நாம் பாதிக்கப்பட்டு 30 வருடங்களாக கஷ்டப்படுகின்றோம். இது எம் பூர்வீகம். காணி உரிமைகளும் இருக்கின்றன. நாம் இங்கு வாழ்ந்துவந்தவர்கள். பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்திலும் இந்த கிராமத்தின் பெயர் உள்ளது. அடையாள அட்டடையிலும் இந்த முகவரியே. இங்கிருந்து துரத்தப்படும்போதே எனக்கு ஒரு வயதுமாத்திரமே. தாய் என்னையும் அக்காவையும் சுமந்துசென்றாள். இப்போது, அக்காவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள். எனக்கும் இரண்டு குழந்தைகள். ஆயிரம் பேராக சென்றவர்கள் இன்று மூவாயிரமாகியுள்ளனர். புத்தளத்தில் வாழ்க்கை நடத்த இடம் இருக்கவில்லை. இங்கும் வாழ வழியில்லையெனின் நாம் எங்குதான் செல்ல.
முன்னர் விடுதலைப் புலிகள் எம்மை வைத்து வேலை வாங்கினர். புலிகளின் வேண்டுகோளுக்கு இணங்காத தந்தையை கொலை செய்து, மரமொன்றில் தொங்கவைத்து, ஐந்து கிராம மக்களையும் வரவழைத்து எச்சரித்தனர். எனக்கு அதுதொடர்பான பதிவுகள் இல்லை. சிறு பிராயத்திலிருந்தே தந்தையும் இன்றி, இருப்பிடமும் இன்றி நாம் சந்தித்த கவலைகளை நாம் மட்டுமே அறிவோம். எமக்கு யாருமே உதவிசெய்யவில்லை. தாய் புத்தளத்தில் உள்ள இறால் பண்ணையொன்றில் வேலைசெய்து எம்மை வளர்த்தாள். நாம் 2009ஆம் ஆண்டு இங்கு வந்து பார்த்துவிட்டு, வீடமைக்க முயற்சித்தோம். எமது காணிகள் சரணாலயம் என்று அரசு தெரிவித்தது. பின்னர் வன பாதுகாப்பு திணைக்களம் காணிகளுக்கு உரிமையாளர்கள் நாமே என்று உறுதிசெய்தது. நாம் வீடமைக்க ஆரம்பித்தோம். எமது காணிகளை விடுவிக்கவும் வன பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கையெடுத்தது. இந்த பாதைகளை அமைத்ததும் அரசாங்கமே. பெரிய மரங்களை வெட்டியதும் அரசாங்கமே. நாம் எமது இருப்பிடங்களை துப்புரவு செய்துகொண்டோம். இப்போது, எனது தோட்டத்தில் குடி நீரில்லை. நாம் கடற்படையினரின் குழாயிலிருந்தே நீரைப் பெற்றுவருகிறோம். குளத்திலும் நீர்மட்டம் குறைவு. குளிக்கவும் நீரில்லை. எனது காலைப் பாருங்கள். உடல் பூராகவும் தூசி படிந்துள்ளது. ஹில்மியின் காலை பார்க்க முடியாதளவு புண்கள் நிறைந்திருந்தன.

வில்பத்து கற்பனை
இது மரிச்சுகட்டிய கிராமம் தொடர்பான கதையாகும். வில்பத்து கற்பனைக் கதையைப் போன்றே, சுற்றாடலியலாளர்கள் என்று தம்மை அழைத்துக்கொள் வோரின் கண்களில் படாத உண்மையான காடழிப்பு தொடர்பாகவும் நாம் எழுதவுள்ளோம். இந்த பயணத்தில் மரிச்சுக்கட்டிய கிராமத்தை தவிர நாம் பார்வையிட்டது எவ்வளவோ உள்ளது. நாம் றிஷாதின் உண்மைக்காகவே முன்வந்துள்ளோம். இந்த மக்களின் வேதனைகளை எடுத்துக்கூறும் தேவையே எமக்கிருந்தது. திடீரென சுற்றாடல் விழிப்பேற்பட்டுள்ள, தெரு நாய்களுக்காக போராடிவரும் ஒடாரா குணவர்தன போன்ற கொழும்பு 7 நோனாக்கள் தெரு நாய்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட இந்த மக்களின் துன்பங்களுக்கு இல்லாமலிருக்கலாம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவர்ச்சிக்காக உதவித் திட்டங்களை மேற்கொண்டவர்களுக்கு, 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வரமுடியாதிருக்கலாம். நாம் உண்மையை எவ்வளவு உரக்கக்கூறினும், சுற்றாடலியலாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களின் உண்மையின் அளவு எமது சத்தம் ஒலிக்காமலிருக்கலாம். 100 பேர் பொய் கூறும் போது, ஒருவர் உண்மை கூறிடினும் உண்மை உண்மையே.
இப்போது மேலெழுந்துவரும் முஸ்லிம் விரோதச் செயல்கள் நாளை இன்னொரு யுத்தத்தையே ஏற்படுத்திவிடும். அதன் பின்னர் அதன் குற்றத்தையும் முஸ்லிம்களின் முதுகில் சுமத்திவிடுவார்கள். பாவப்பட்ட தமிழ், முஸ்லிம் இனங்களுடன் பாவத்துக்கு மன்னிப்பளித்த சிங்கள இனமொன்றும் மிஞ்சுவார்கள். நாளை யுத்தமொன்றேற்பட்டால் தீவிரவாத முஸ்லிம்களோ! றிஷாத் பதியுதீனோ அல்ல. இந்த அப்பாவி, ஏழை முஸ்லிம்களே மீண்டும் பாதிக்கப்படுவார்கள். சமூக வலைத்தளங்களின் உதவியுடன் கொழும்பை மையமாக வைத்து இயங்கும் சிங்கள தீவிரவாதிகளின் உயிர்களாலன்றி, கிராமப் புறங்களில் வாழும் அப்பாவி சிங்கள இளைஞர், யுவதிகளாலேயே. மீண்டுமொரு யுத்தத்திற்கு அடித்தளமிட்ட பின்னரும் சிறப்பாக வாழ எதிர்பார்ப்பவர்களுக்கு யார் குற்றஞ்சாட்டினாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் அந்த பாவத்தின் பங்குதாரர்களே என்பதை வில்பத்து வீரர்களுக்கு நினைவுகூருகின்றோம்.       

1 comment:

  1. மனித வாழ்வின் விழுமியங்களைப் பேணிப்பாதுகாப்பதற்கான வழிகாட்டல்களையும் நாட்டின் அபிவிருத்தியில் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் ஊடகங்களின் பங்கு வலுவானது. இதற்கு மாற்றமாக நாடும் மக்களும் எக்கேடுகெட்டாலும் நாமும் நமது ஊடகமும் செழிக்க வேண்டும் என்ற வகையில் செயற்படும் ஹிரு போன்ற ஊடகங்களுக்கு ராவய பாடம் நடாத்த வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.