ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெளியேறும் நிலை - தொல்பொருள் என்ற பெயரில், மற்றுமொரு பிரதேசம் இலக்கு
சம்மாந்துறை மைய வாடியை அண்மித்த மலைப் பிரதேசத்தை தொல்பொருள் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவிக்கிறது.
மலையின் ஒரு பகுதியில் கருங்கல் உடைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் தொல்பொருள் இருப்பதற்கான தடயங்களைக் கொண்டுள்ள மலையின் ஒருபகுதி எல்லையிடப்பட்டு தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நீல்மல் கொடயைத் தொடர்பு கொண்டு வினவியபோது அவர் தனது அதிகாரியொருவர் ஊடாக பின்வருமாறு விளக்கமளித்தார்.
‘மையவாடிக்கு அருகாமையிலுள்ள மலை கல் உடைப்பதற்கு ஐவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் மலையின் ஒரு பகுதி தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லையிட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியிலே தொல்பொருள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்பகுதி எவ்வித நடவடிக்கைகளுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இம்மலைப் பிரதேசத்தைத் தொல்பொருள் வலயமாக பிரகடனப்படுத்துவது ஆய்வுகளின் பின்பே தீர்மானிக்கப்படும் என்றார்.
சம்மாந்துறை மையவாடியை அண்மித்த மலையைச் சூழ சுமார் 2000 குடும்பங்கள் 50 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றன. இங்கு பள்ளிவாசலொன்றும் அமைந்துள்ளது. பள்ளிவாசலுக்கென்று காணியொன்றும் உள்ளது. சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த சுமார் 3000 ஜனாஸாக்கள் இப்பகுதியிலே அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சம்மாந்துறையைச் சேர்ந்த தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலைத் தொடர்பு கொண்டு வினவியபோது தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளமிடப்பட்டு கம்பி நாட்டியுள்ள வீடியோ பதிவு தனக்கு சிலரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சம்மாந்துறை மையவாடியை அண்மித்த மலைப் பிரதேசத்தில் வாழும் மக்கள் தன்னிடமும் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அப்பிரதேசம் தொல்பொருள் வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற வேண்டியேற்படுமெனவும் மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ARA.Fareel
Post a Comment