Header Ads



தொழுகையாளிகளே, உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்

-அஸ்ஹர் ஸீலானி-

"பிலாலே! தொழுகைக்காக இகாமத்துச் சொல்லும் தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் தான் நாம் மன நிம்மதி பெறுகின்றோம்" (அபூதாவுத்: 4987). "எனக்கு கண்குளிர்ச்சி தொழுகையில் தான் உள்ளது" (நஸாஈ: 3939). இது நமது உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதரின் கூற்றுகளாகும். உண்மையில் முஃமினுக்கு தொழுகையில் தான் மன நிம்மதியும், கண்குளிர்ச்சியும் இருக்க முடியும் என்பதை இக்கூற்றுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இன்றைய நமது தொழுகையின் நிலையை கொஞ்சம் மீழ் பரிசீலனை செய்து பார்ப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் கடமைபட்டிருக்கின்றோம். அவைகள் நமக்கு சுமைகளாக மாறிவட்டனவா? அல்லது அதன் மூலம் உண்மையில் மன நிம்மதியையும், கண்குளிர்ச்சியையும் தான் பெற்றுக்கொண்டிருக்கின்றோமா? 
தொழுகையாளிகளே! உங்களுக்காக எத்தனை  எத்தனை நற்பாக்கியங்கள் காத்திருக்கின்றன. தொழுகையை நிறைவேற்றும் உங்களுக்கு மாத்திரம் தான் இந்த எண்ணற்ற நற்பாக்கியங்கள். தொழுகையை பாழ்படுத்தும் பாவிகளுக்கு அல்ல!
1- தொழுகையாளிகளுக்கு வெற்றி உறுதி என்ற சுபச்செய்தி:
'ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்". (அல்முஃமினூன் 23: 1,2).
2- மன உறுதியுடன் இருப்பவர்கள் தொழுகையாளிகள் என்ற சுபச்செய்தி:
"நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான். ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானானல் (அது பிறருக்கும்கிடைக்காதவாறு) தடுத்துக் கொள்கிறான். தொழுகையாளிகளைத் தவிர (அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்". (அல்மஆரிஜ் 70: 19-23).
3- அல்லாஹ்விடம் மிகவும் விருப்பத்திற்குரிய வணக்கம் தொழுகை 
என்ற நற்செய்தி:
அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்குரிய நற்கருமம் எது? என கேட்கப்பட்ட போது, தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது என அல்லாஹ்வின் தூதர் பதிலளித்தார்கள்'. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், புஹாரி: 527).
4- ஐவேளைத் தொழுகைக்கு ஐம்பது நேரத் தொழுகையின் 
நன்மை என்ற நன்மாராயம்:
"........ ஐந்தாவது முறை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபிகளாரை மேலே அழைத்துச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், 'என் இறைவா! என் சமுதாயத்தார் உடலாலும், உள்ளத்தாலும், கேள்வியாலும், பார்வையாலும், மேனியாலும் பலவீனமானவர்கள். எனவே, (தொழுகைகளை) குறைத்திடுவாயாக!' என்று கோரினார்கள். அதற்கு சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன 'முஹம்மதே!' என்று அழைத்தான். அதற்கு 'இதோ இறைவா! நான் காத்திருக்கிறேன்; கட்டளையிடு' என்று பதிலளித்தார்கள்.  அதற்கு அல்லாஹ், '(ஒரு முறை சொல்லப்பட்ட) சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை; அதை (-ஐவேளைத் தொழுகையை) நான் உங்களின் மீது 'லவ்ஹுல் மஹ்ஃபூல்' எனும் பாதுகாக்கப்பெற்ற பதிவேட்டில் கடமையாக(ப் பதிவு) ஆக்கிவிட்டேன். மேலும், ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகள் உண்டு. எனவே, அவை உங்களுக்கு ஐந்து நேரத் தொழுகைகளாக இருப்பினும், பாதுகாக்கப் பெற்ற பதிவேட்டில் அவை ஐம்பது நேரத் தொழுகைகள் (உடைய நன்மைக்கு நிகர்) ஆகும்' என்று சொன்னான். …." (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள், புஹாரி 7517). இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி.

5- அடியான் அகிலங்களின் இரட்சகனுடன் உரையாடுகின்ற நற்பாக்கியத்தைப் பெறுகின்ற
இடம் தொழுகை என்ற நன்மாராயம்:
'நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றும் போது தனது ரப்புடன் உரையாடுகின்றார்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி: 405).
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  "ஒருவர் தொழும்போது தம் இறைவனுடன் உரையாடுகிறார். எனவே, தமக்கு முன்னாலோ, வலப்புறமாகவோ எச்சில் துப்பவேண்டாம். எனினும் இடதுபுறமாக தம் இடது பாதத்தின் அடியில் துப்பட்டும்". (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி: 532).
6- தொழுகையில் அடியான் கேட்டதெல்லாம் அவனுக்குண்டு  என்ற நற்செய்தி:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "எவர் தான் தொழுகின்ற தொழுகையில் உம்முல் குர்ஆனை (பாத்திஹா) ஒதவில்லையோ அவரது தொழுகை பூரணமற்றதாகும், பூரணமற்றதாகும், பூரணமற்றதாகும் என நபிகளார் சொன்னதாக அவர் கூறிய வேளை அவர்களிடம் அபூ ஹுரைராவே! நாம் இமாமுக்குப் பின்னால் இருக்கின்ற போது (எப்படி நடந்து கொள்வது?)எனக் கேட்கப்பட்டது. அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் உனது மனதுக்குள் ஓதிக் கொள்வாயாக! ஏனெனில் நபியவர்கள் அல்லாஹ் ( ஹதீஸ் குத்ஸியில் ) சொன்னதாகக் கூறினார்கள்.
''தொழுகையை எனக்கும் எனது அடியானுக்குமிடையில் இரண்டாக வகுத்து வைத்துள்ளளேன். எனது அடியான் கேட்பது எதுவானாலும் அதை அவனுக்கு வளங்குவேன். (அடியான்) புகழ்யாவும் அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்விற்கே! எனக்கூறினால் எனது அடியான் என்னை புகழ்ந்துள்ளான் என அல்லாஹ் கூறுவான். (அவன்) அல்லாஹ் அருளாளன் அன்புடையோன் எனக்கூறினால் எனது அடியான் என்னை துதித்துள்ளான் என அல்லாஹ் கூறுவான். இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதி என அடியான் கூறினால் என்னை என் அடியான் கீர்த்தியாக்கிவிட்டான் அல்லது அவனது காரியத்தை என்னிடம் ஒப்படைத்துவிட்டான் என அல்லாஹ் கூறுவான். (யாஅல்லாஹ்) உன்னையே வணங்குகின்றோம். உன்னிடமே உதவி தேடுகின்றோம். என அடியான் கூறினால் இது எனக்கும் எனது அடியானுக்கும் இடையிலுள்ளது. என் அடியான் கேட்பவைகளை நான் கொடுக்க தயாராகவுள்ளேன் என அல்லாஹ் கூறுவான். அடியான் நேரான வழியைக் காட்டுவாயாக! அதை நீ எவர்கள் மீது அருள்புரிந்தாயோ அவர்களின் வழி. எவர்களின்மீது நீ கோபங்கொண்டாயோ அவர்களின் வழியுமில்லை. வழிதவறியோர் வழியுமில்லை. என அடியான் கூறினால் இது எனது அடியானுடன் சம்பந்தப்பட்டது. எனது அடியான் கேட்டவைகள் அவனுக்குண்டு என அல்லாஹ் கூறுவான்.  (முஸ்லிம்: 904).

No comments

Powered by Blogger.