'தமிழ் - முஸ்லிம் தலைவர்களை உள்ளடக்கி, ஒரு தீர்வை முன்வையுங்கள்'
நாடு மீண்டும் ஒரு அழிவை சந்திக்கப்போவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விடுதலைப் புலிகள் அழிந்தமையானது, ஒரு சிலருக்கு வேண்டுமானால், சந்தோசமாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி அல்ல. நான், நாட்டு மக்கள் அனைவரையும் நேசிப்பவன்.
எது நடந்து விடக்கூடாது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அடிக்கடி கடிதம் எழுதினேனோ, அதுதான் கடைசியில் நடந்தும் முடிந்தது. அதேபோல்தான் இன்றும் தனித்து நின்று கூறுகின்றேன்.
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள், தாங்கள்தான் என்று கூறும் ஒருசிலருடன் மட்டும் நீங்கள் உறவு வைத்துக்கொண்டு, ஏனையவர்களை புறம்தள்ளி, தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நடத்தும் ஆட்சியில், எமது மக்களுக்கு நிலையான தீர்வு எதுவும் கிட்டப்போவதில்லை.
உங்கள் தேசிய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களே, அரசில் நம்பிக்கை இழந்து பேசுகின்றார்கள். இந்நிலையில், எமது மக்களுக்கு, இந்த அரசு எதனையும் சாதிக்கப்போவதில்லை.
காலங்காலமாக குறிப்பிட்ட ஒருசிலருடன், அவர்களை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அதுதான் வரலாறும் ஆகும்.
அவ்வாறான ஒரு செயலையே மீண்டும் நீங்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இது நாட்டுக்கு மீண்டும் ஒரு அழிவையே கொண்டுவரும்.
சகல தமிழ் அமைப்புகள் மற்றும் சகல முஸ்லிம் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கி ஒரு பேச்சுவார்த்தை மூலம் விரைவில் ஒரு தீர்வை முன்வையுங்கள்.
புதிய அரசியல் அமைப்பு என்று கூறி காலத்தை இழுத்தடிப்பதும், மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றிவிட்டு, என்றுமில்லாதவாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகளை அளிப்பதும், மாற்றத்தை ஏற்படுத்திய சகல இன மக்களையும் ஒரு ஏமாற்றும் செயலாகவே நான் கருதுகின்றேன்.
மீண்டும் மக்களிடையே இனக்குரோதம் வளரத் தொடங்கியுள்ளது என்பது, நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளே சான்றுகூறுகின்றன.
இந்திய முறையிலான ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கி, தென்னாபிரிக்க அரசியல் சாசனத்தில் உள்ளது போன்ற உரிமைகள் சட்டத்தை உள்ளடக்கி,
அதனை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் ஒரு நல்ல தீர்வை வழங்கி, நாட்டு மக்கள் அனைவரையும் சுபீட்சமாக வாழவைக்கலாம்” என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
nice topic.....
ReplyDelete