ஜனாதிபதி மீது அடக்குமுறையா..?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜா எல தொகுதி அமைப்பாளருமான பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தம் கருத்து தெரிவித்த அவர்,
இந்த நாட்டின் முதல் குடிமகன், அரசியல் அமைப்பின் அடிப்படையில் அதிகாரங்கள் செறிந்து காணப்படும் நாட்டின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரங்களையும் விஞ்சி சிலர் செயற்படுகின்றனர்.
கள்வர்கள் கொள்ளையர்களின் அதிகாரங்களே இன்று வியாபித்துள்ளது. இதற்கு சிறந்த உதாரணமாக ஜாஎல முத்துராஜவெல ஈர நிலத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மண்குவிப்பு நடவடிக்கைக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார் என ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
சுற்றாடல் அழிவினை தடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவும் தகவல் வெளியிட்டிருந்தது.
எனினும் இந்த அறிவிப்புக்களின் மூலம் எவ்வித நன்மையும் கிடைக்கப்பெறவில்லை. மேலும் பாதாள உலகக் குழுவினரை ஈடுபடுத்தி இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத மண் குவிப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதியால் தடுக்க முடியவில்லை.
பாதாள உலகக் குழுக்களின் அடக்குமுறைக்கு நாட்டின் ஜனாதிபதியும் சிக்கிக்கொண்டுள்ளார். சுற்றாடலை பாதுகாக்க ஜனாதிபதியும் அவரது செயலாளரும் முயற்சித்து வருகின்ற போதிலும் அதன் பலன்கள் கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment