Header Ads



''யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்'' வாக்குறுதிகளும், இழுத்தடிப்புகளும்..!!

எம்.உஸ்மான், 
-யாழ் முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கான அமைப்பு -

1990 ஆம்  ஆண்டு  ஒக்டோபர்  மாதம்  30 ஆம்  திகதி  யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள்  விடுதலைப்  புலிகள்  அமைப்பால்  வெளியேற்றப் பட்டார்கள். அப்போது  யாழ்  மாவட்டத்தில்  3500  முஸ்லிம்  குடும்பங்கள்   வாழ்ந்து வந்தன. இவர்களில்   1700 பேர்  சொந்த வீடுகளில்  வசித்து  வர  ஏனையோர் கூட்டுக் குடும்பங்களாக  ஒரு  வீட்டில்  பல  குடும்பங்கள்  என்ற  வகையில் வாழ்ந்து வந்தனர்.  வெளியேற்றப் பட்ட போது  3500  குடும்பங்களாக  இருந்தவர்கள்  கடந்த  26 வருடங்களில்  பல்கிப் பெருகி  இன்று  7500 முதல் 9000 குடும்பங்களாக பெருகியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில்   மீளக் குடியேறியுள்ள  900  குடும்பங்களில்  அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தில்  காணியில்லாதவர்கள்.  அல்லது  யுத்த  சூழ்நிலை  காரணமாக தமது  காணிகளை  அடிமாட்டு  விலைக்கு  விற்றவர்களாவர்.   இந்த  900 குடும்பங்களில்   600  குடும்பங்கள்  தொடர்ந்தும்  யாழ்ப்பாணத்தில் வசித்துவருகின்றனர்.  ஏனையோர்  2011 மற்றும் 2012  ஆம்  ஆண்டுகளில்  யாழில் குடியேறி   மீள்குடியேற்ற  வீடமைப்புகளுக்காக  விண்ணப்பித்து  விட்டு  2016 வரை  6  வருடங்கள்  காத்திருந்து  எந்த   உதவியும்  கிடைக்காததால்  தொடர்ந்து  வாடகை  வீடுகளிலும்  அறைகுறை  வசதிகளைக்  கொண்ட  பொது  இடங்களிலும்  தொடர்ந்து  வசிக்க  முடியாமல்  குடும்பங்களை  மீண்டும் புத்தளம்  போன்ற  பிரதேசங்களில்  விட்டு  விட்டு  தாம்  மட்டும் யாழ்ப்பாணத்தில்  இருக்கின்றனர்.
இதைவிட   இன்னும்  1300  குடும்பங்கள்  2011  மற்றும்  2012  இல்  யாழ்ப்பானத்தில்  மீள்குடியேற  தமது  பதிவுகளைச்  செய்து விட்டு பாடசாலக் கட்டிடங்களிலும்  நண்பர்கள்  உறவினர்கள்  வீடுகளிலும்  வசித்து  வந்தனர்.  6 மாதத்துக்கு  மேல்  காத்திருந்த  இவர்களுக்கு  எந்த  வித  உதவியும்  கிடைக்காத நிலையில்  யாழில்  இருந்து  இவர்கள்  வெளியேறியிருந்தனர்.
இவ்வாறான  2200  குடும்பங்களும்  அப்போது  மீள்குடியேற்ற  அமைச்சராக இருந்த  றிசாத் பதியுதீன்  அவர்கள்  தம்மை  வீடுகளைக்  கட்டித்தந்து மீள்குடியேற்றுவார்  என்று  எண்ணியிருந்தார்கள்.  அவரும்  பழைய  அகதிகளை விட்டு விட்டு  புதிதாக  யுத்தத்தால்  இடம்பெயர்ந்த  தமிழர்களை மீளக்குடியேற்றுவதிலேயே  முன்னிரிமை  வழங்கிச்  செயற்பட்டார்.  இதனால் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி  மாவட்ட  மக்கள்  நன்மையடைய யாழ்ப்பாண  முஸ்லிம்களுக்கு  எதுவும்  கிடைக்கவில்லை.
ஏமாறிய  மக்கள்  யாழ்  கிளிநொச்சி  முஸ்லிம்  சம்மேளம்  ஊடாக அமைச்சருடன்   மீள்குடியேற்றம்  வீடமைப்பு  சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளிலும்  ஆலோசனைக்  கூட்டங்களிலும்  ஈடுபட்டனர்.  வேறு பலர்  பி.ஏ.எஸ். சுபியான மௌலவி,  அஸ்மின்  ஐயூப்  மௌலவி போன்றவர்களும்  பல்வேறு  நபர்களும்  மீள்குடியேற்றம்  சம்பந்தமாக  பல கோரிக்கைகளை  அமைசருக்கு  சமர்ப்பித்தனர்.   இது  எவையும்  நிறைவேட்டப் படாத  நிலையில்  ரிஷாத் பதியுதீன்  அவர்களின்  அமைச்சும்  மாற்றப் பட்டு வர்த்தக  கைத்தொழில்  அமைச்சராக  மாற்றப்பட்டார்.
தொடர்ந்தும்  அவர்  யாழ்  மாவட்டத்துக்கான   அகில  இலங்கை   மக்கள் காங்கிரஸ்  கிளையை  விரிவுபடுத்தியதுடன்  அவர்களுக்கு  பல்வேறு வாக்குறுதிகளையும்  வழங்கியிருந்தார்.  மீள்குடியேற்றம்  சம்பந்தமாக தொலைக்காட்சி  விவாதங்களில்  பங்கு  பற்றி  தடையாக  இருக்கும்  தமிழ் அரசியல்  தலைவர்களை  சாடியிருந்தார்.  மேலும்  பத்திரிகை  அறிக்கைகள் மூலம்   யாழ்  முஸ்லிம்களை  மீளக் குடியேற்றுவேன்  என்று  அறிக்கைகள் விட்டிருந்தார்.
ஆனால்  ஆண்டுகள்  ஆறு  கடந்தும்  அமைச்சர்  றிசாத்  மூலமாக  யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு  மீள்குடியேற்றத்  திட்டம்  எதுவும்  கிடைக்கவில்லை. மேலும் தற்போது   வடமாகாண  மீள்குடியேற்றச்  செயலணியில்  அமைச்சர்  றிசாத் இருந்தும்  அண்மையில்  மீள்குடியேற்ற  அமைச்சினால்  மேற்கொள்ளப் பட்ட பொருத்து  வீடுகளுக்கான  பதிவுகள்  சம்பந்தமான  எந்த  அறிவுறுத்தலும்  யாழ் முஸ்லிம்களுக்கு  வழங்கப் படவில்லை.  இதனால்  யாழ்  முஸ்லிம்கள் பொருத்து  வீடு  திட்டத்துக்கு  விண்ணப்பிக்கவில்லை.  ஏற்கனவே  ஆகஸ்ட்  2016 தொடக்கம்  இடம்பெற்ற  மீள்குடியேற்ற  மீள்பதிவுகள்  கூட  றிசாத் அமைச்சரால்  மேற்கொள்ளப் படுவதாகவே  மக்கள்  கருதியிருந்தனர்.  அமைச்சர் றிசாத்  மீது  கொண்டிருந்த  நம்பிக்கையால்   தான்  மக்கள்   தமது  வறுமையான நிலையிலும்  கடன்  வாங்கிக்  கூட  யாழ்  சென்று   முண்டியடித்து  பதிவுகளை மேற்கொண்டனர்.
அந்த  பதிவுகள்  மேற்கொள்ளப்பட்டு  ஐந்து  மாதங்களாகி  விட்ட  போதிலும் அவ்வாறு  விண்ணப்பித்த  3200  குடும்பங்களின்  நிலை  என்ன  என்று  இதுவரை எதுவும்  தெரியவில்லை.  மேலும்  அமைச்சர்  றிசாத்  அவர்கள்  அடுக்கு  மாடித் திட்டத்தை  காணியில்லாத  யாழ்ப்பாண  முஸ்லிம்களுக்கு  வழங்கப்  போகிறார் என்ற  அறிவிப்புகளும்  கதைகளும்  அங்காங்கே  பரவியிருந்தன.  மேலும்  இந்த அடுக்கு  மாடித்  திட்டத்துக்கான  காணிகளையும்  அகில  இலங்கை  மக்கள் காங்கிரஸின்  யாழ்  மாவட்ட  நிர்வாகிகள்  மேற்கொண்டு  தற்போது  ஒரு வருடமாகின்றது.  ஆனால்  எதுவும்  நடந்த பாடில்லை.  இதனால்  யாழ்ப்பாண முஸ்லிம்கள்  மிகுந்த  விரக்தியில்  இருக்கின்றனர்.
மேலும்  யாழ்  ஹதீஜா  போன்ற  சில  இடங்களில்  காணிகளற்ற  குடும்பங்கள் குடியேறி   வீடமைப்புத்  திட்டங்களை  எதிர்பார்த்தவர்களாக  காத்திருக்கின்றனர். இவ்வாறு  ஏறக்குறைய  60  குடும்பங்கள்  இருக்கின்றது.
மேலும்  2011  மற்றும்  2012  பதிவு  செய்த  2165  குடும்பங்களில்  இதுவரை ஏறக்குறைய  150  குடும்பங்களுக்கே  வீடமைப்பு  உதவிகள்  வழங்கப் பட்டுள்ளன.  தற்போது  3200 பேர்  விண்ணப்பித்துள்ளனர்.  இவர்களுக்கு  எப்போது வீடுகள்  வழங்கப் படும்.
வடக்கு  முஸ்லிம்களின்  உரிமைக்கான   அமைப்பு.  ஓர்மன்,  யாழ்  முஸ்லிம் அபிவிருத்தி  அமைப்பு,  யாழ்  கிள்நொச்சி  சம்மேளனம்  போன்றன  கட்டாய இடப்பெயர்வுக்கான  நஷ்ட ஈடு ,  வீட்டைத்  திருத்துவதற்கான  நஷ்ட ஈடு, கொள்ளையடிக்கப்  பட்ட  வீட்டுப்  பொருட்கள்  வியாபார  பொருட்கள் போன்றவற்றுக்கான  நஷ்ட ஈடுகளைக்  கேட்டே  போராட்டம்  நடத்தி வந்ததுடன் கோரிக்கைகளையும்  முன்வைத்திருந்தனர்.   தற்போது மீள்குடியேறுபவர்களுக்கே  வீடுகள்  என்றால்  உடைக்கப் பட்டுள்ள  ஏனைய வீடுகளை  கட்டிக் கொடுப்பது  யார்.  அதற்கான  நஷ்ட ஈட்டை  பெற்றுத் தரப் போவது  யார்?
ஆகக்  குறைந்தது  உடைக்கப் பட்ட  வீடுகளை  இராணுவத்தை  கொண்டு திருத்திக்  கட்டலாம்.   அவ்வாறாக  உடைக்கப் பட்ட  வீடுகளுக்கு  50  பக்கட் சீமெந்து,  1500  கொங்கிரீட் கல்லுகள் , ஒரு  கியூப்  மண்,  ஒரு  கியூப்  சல்லிக் கல்,  1500 ஓடுகள்  போன்றவற்றை  வழங்கினால்  கூட  வீடுகள்  உடைந்து  போயுள்ள  500 குடும்பங்கள்  தமது  வீடுகளை  திருத்திக்  கொள்வார்கள்.
இவற்றை  வழங்க  250000 ரூபாய்கள்  போதுமானது.  கட்டுமானத்துக்கு இராணுவத்தின்  உதவியை  பெற்றால்  இலகுவாக  வீடுகளைத்  திருத்திக் கட்டலாம்.  இந்த ஐனூறு  வீடுகளைத்  திருத்த  125  மில்லியன்  ரூபாய்களைப் பெற்றுக்  கொடுக்க  முடியாதா?
40  வீடுகளைக்  கொண்ட  தொடர்மாடி  வீடுகள்   ஐந்தைக்   கட்டுவதன்  மூலம்   200 குடும்பங்களை   மீளக் குடியேற்றி  எமது  பள்ளிவாசல்களின்  எதிர்கால பாதுகாப்பை  உறுதி  செய்ய முடியும்.
மேலும்  யாழ்ப்பாணத்தில்  முஸ்லிம்களுக்கென்று  இஸ்லாமிய  கலாச்சார நிலையமொன்று  நீண்டகாலத்  தேவையாக  உள்ளது.  இதற்காக  இருபது  முதல் 30 பேர்சஸ்  காணியை  கொள்வனவு  செய்து  அதில் ஒரு  கலாச்சார  மண்டபத்தை  அமைத்தால்  முஸ்லிம்கள்  தமது  திருமணத்தை   அங்கு  நடத்திக்  கொள்வார்கள்.  மேலும்  அதை  பல்வேறு  நிகழ்ச்சிகளுக்கான  வரவேற்பு மண்டபமாகவும்  உபயோகிக்க  முடியும்.  கலாச்சார  மண்டபத்துக்கான  காணி வாங்க  5  மில்லியன்  ரூபாவும்  அதில்  கலாச்சார  மண்டபத்தை அமைப்பதற்கான  செலவாக  15  மில்லியன்  ரூபாவும்  மொத்தமாக  இருபது மில்லியன்  தேவைப்படும்.
இந்த  திட்டங்கள்  அனைத்தும்  2017  ஆம்  ஆண்டு  டிசம்பருக்கு  முன்னர்  பூர்த்தி செய்யப்  படவேண்டும்.   பரச்சேரி  வயல்  காணி  சிக்கலுக்குரியது.  அதைப் பற்றி கதைப்பது  காலத்தை  இழுத்தடிக்கும்  ஒரு  காரியமாகும்.
யாழ்ப்பாணத்தில்  தேசிய  மீலாத்  விழா  நடத்தப் படவுள்ளதாக  அண்மையில் யாழ் முஸ்லிம்  இணையத்தளம்  செய்தி  வெளீயிட்டிருந்தது.  உடைந்து  அழிந்து காடாக  போயுள்ள  ஒரு  ஊரினுள்   தேசிய  மீலாத்  விழா  நடத்துவது  என்பது முஸ்லிம்  அமைச்சர்களுக்கும்  பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கும்  வெட்கத்தை  உண்டு பண்ணும்  செயலாகும்.
எல்லா  முஸ்லிம்களும்  குறிப்பாக  அரசியல்  வாதிகள்  அத்தனை  பேரும் ஒன்று  சேர்ந்து  யாழ்ப்பாண  முஸ்லிம்  பிரதேசத்தை  மீள்க கட்டியெழுப்ப முன்வரவேண்டும்.  அதிலும்  யாழ்  முஸ்லிம்களுக்கு  பல  வாக்குறுதிகளை வழங்கியவர்  என்ற  அடிப்படையில்  அமைச்சர்  றிசாத்  அவர்கள்  காலம் தாழ்த்தாது  யாழ்    முஸ்லிம்களுக்கான    மீள்குடியேற்ற  வீட்டுத் திட்டங்கள், கலாச்சார  மண்டபம்  போன்ற   பொதுக்  கட்டிடங்கள்,  மைதான  புனரமைப்பு, வீதி  அபிவிருத்திகள்  போன்றவற்றை  செய்து  தர  வேண்டுமென்பது  எமது கோரிக்கையாகும்.  யாழ்  முஸ்லிம்  மக்கள்  அமைச்சர்  றிசாத்  மீது  வைத்துள்ள நம்பிக்கையை   அவர்   செயற்பாடுகள்  மூலமாக   உறுதிப் படுத்த  வேண்டும்.

No comments

Powered by Blogger.