கபுறுக்குள் என்னதான் நடக்கிறது..?
சில தினங்களுக்கு முன் ஒரு ஜனாஸாவை அடக்கம் செய்ய்வதற்காக மய்யித் கொள்ளைக்கு சென்றிருந்தோம். வெகு காலத்திற்குப்பிறகு மய்யித் கொள்ளை செடி, கொடிகளெல்லாம் களை எடுக்கப்பட்டு சுத்தமாக இருந்தது உள்ளத்தில் உவகையைக் கொடுத்தது. இருந்த போதிலும் அங்கு பாம்பின் சட்டை (பாம்பு தனது உடம்பிலுள்ள மேல் தோலை அவ்வப்போது உறித்துப்போடுமே அது) ஒன்று கிடந்தது.
மோதினாரிடம் அதைப்பற்றி வினவியபோது.... "ஆம் இங்கு பல பாம்புகளின் நடமாட்டம் இருப்பது உண்மைதான் என்று சொன்னவர் சில கபுருகளைக்காட்டி இதற்குள்ளெல்லாம் பாம்பு குடியிருக்கிறது என்னும் விபரத்தையும் பட்டியலிட்டார்.
நமக்கு உண்மையில் அதிர்ச்சியாகவும் அச்சமாகவும் இருந்தது.
சரி கபுருகளில் அப்படி என்னதான் நடக்கின்றன என்பதை அறிந்து கொள்வோமா...?! -adm. nidur.info
சமாதிக்குள் என்னதான் நடக்கிறது?
ஒரு சுவாரசியமான கதையை வாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள். கடைசிப் பக்கங்கள் நெருங்க நெருங்க கதை க்ளைமாக்ஸை அடைகிறது...... திக் திக் என்று உங்கள் உள்ளம் அடித்துக்கொண்டு இருக்கும்போது உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.... என்ன அது?
.... புத்தகத்தின் மீதிப்பக்கங்களைக் காணோம்!!! ..... என்ன செய்வீர்கள்? அதை அறிய ஆவல் கொள்வோமா இல்லையா? அதுவும் அந்தக் கதை அப்படியே உங்கள் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருந்தால் என்ன செய்வீர்கள்? எப்படியாவது அதன் முடிவை அறிய முயற்சிப்பீர்கள் அல்லவா?
இதோ உங்கள் கதையின் தொடர்ச்சியை .... அடுத்த அத்தியாயத்தை..... தொடர்ந்து படியுங்கள்...
ஆம், உங்கள் மரணத்திற்குப் பிறகு சமாதி வாழ்க்கை என்று ஒன்று தொடங்குகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதை இறைவன் தன தூதருக்கு அறிவித்துக் கொடுத்த செய்தியில் இருந்து அறிய வருகிறோம்.... நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டால் அவரிடம் கரு நிறமான நீல நிறக் கண்களுடைய இரண்டு வானவர்கள் வருவார்கள். அவர்கள் முன்கர் என்றும் நகீர் என்றும் சொல்லப்படுவார்கள்' அவர்கள் இறைத்தூதரைக் குறித்து அவனிடத்தில் 'இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்' என்று கேட்பார்கள். அவன் (இறைநம்பிக்கையாளனாக இருந்தால்) 'அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்று சாட்சி கூறுகிறேன்' என்று கூறுவான். அப்பொழுது அந்த வானவர்கள் அவனை நோக்கி நீ இவ்வாறு கூறுவாய் என்பதை ஏற்கெனவே நாம் அறிந்திருந்தோம் என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனுடைய சமாதி எழுபது முழங்கள் விசாலமாக்கப்படும்.
பின்னர் அந்த சமாதி ஒளியேற்றப்பட்டு பிரகாசமாக்கப்படும். அவனை நோக்கி 'நீ உறங்குவாயாக!' என்று கூறுவார்கள். அவனோ அவர்களை நோக்கி என்னுடைய குடும்பத்திடம் நான் சென்று (எனக்குக் கிடைத்துள்ள இந்த நற்பாக்கியத்தை) அறிவித்து விட்டு வர என்னை விட்டு விடுங்கள் என்ற கூறுவான். அப்பொழுது அந்த வானவர்கள் 'மிக விருப்பத்துக்குரிய ஒருவரேயன்றி வேறெவரும் எழுப்பாதவுள்ள மணமகனின் உறக்கமாக நீ உறங்குவாயாக!' என்று கூறுவார்கள். அன்று முதல் மறுமை நாள் வரை அவன் உறங்கிக் கொண்டே இருப்பான்.
(அந்த இரு வானவர்கள்) பாவி ஒருவனிடம் கேள்வி கேட்கும் போது, 'மக்கள் ஏதேதோ சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் (இப்பொழுது எதுவும்) எனக்குத் தெரியாது' என்று கூறுவான். அப்பொழுது அந்த வானவர்கள் அவனை நோக்கி 'நீ இவ்வாறே பதிலளிப்பாய் என்பதை ஏற்கனவே நாம் அறிந்து வைத்திருந்தோம்' என்று கூறுவார்கள்.
அதனைத் தொடர்ந்து அவனை நெருக்குமாறு பூமிக்கு உத்தரவிடப்படும். அவனுடைய (வலது இடது) விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ளுமளவு அது அவனை நெருக்கும். அவனை அந்த இடத்திலிருந்து அல்லாஹ் எழுப்புகின்ற நாள்வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மிதி: 991)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்.) மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரை இதுவே (இந்த சமாதியே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரீ: 1379)
Quranmalar
We must want to gear up for the life in grave & day of judgement subsequently.
ReplyDelete