மஹிந்தவிற்கு, ரணிலின் சவால்
ஹம்பாந்தோட்டை தொழிற்பேட்டையை நிராகரிப்பதானால் அது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையெழுத்துடன் கூடிய கடிதமொன்றை இணைத்து பிரேரணையை முன்வைத்தால் இது குறித்து கவனம் செலுத்த முடியுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வில் ஹம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பிலான விவாதத்தின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் தினேஷ் குணவர்த்தன எம்பி நேற்று பாராளுமன்றத்தில் 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம் 1300 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவிடமிருந்து கடனாகப் பெற்றிருந்தது. இதனை மீளச் செலுத்தவேண்டியுள்ளது. ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்திட்டத்தின் ஊடாக 5000 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு கிடைக்கவுள்ளது.
இங்கு அமைக்கப்படவுள்ள முதலாவது சீமெந்து தொழிற்சாலையின் மூலம் இலங்கை முதலீட்டாளர் ஒருவரே நன்மை அடையவுள்ளார். இங்கு சீமெந்து தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. இவற்றினால் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஹம்பாந்தோட்டையில் கைத்தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிரணியில் உள்ளவர்கள் விரும்பவில்லையாயின், அவற்றை பொலன்நறுவையில் அமைக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். அமைச்சர்கள் வேறு இடங்களில் அமைக்குமாறு கோருகின்றனர்.
இவ்வாறான நிலையில் ஹம்பாந்தோட்டையில் தொழிற்பேட்டை அமைக்கப்படுவதை நிராகரிப்பதாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் கூடிய கடிதத்தை இணைத்து, அதனை பாராளுமன்றத்தில் பிரேரணையாகக் கொண்டுவந்தால் அது பற்றி கலந்துரையாடி தீர்மானிக்க முடியும்.என பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் அழுத்தம் காரணமாக, சட்டவிரோதமாக கைச்சாத்திடப்பட்டது. இது பற்றி தனக்கு எதுவும் தெரியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டு கடிதமொன்றை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment