கட்டுநாயக்க விமான நிலையத்தில், என்ன நடக்கிறது..? பயணிகள் நெரிசல்
கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பகுதி நேரமாக விமான நிலையம் மூடப்படுவதால், கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
1986ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை முதல்முறையாக புரனமைப்புச் செய்யப்படவுள்ளது.
41 மில்லியன் டொலர் செலவிலான இந்த திட்டத்தை நேற்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆரம்பித்து வைத்தார்.
நெதர்லாந்து விமான விமான ஆலோசனை மற்றும் பொறியியல் ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த புனரமைப்பு திட்டத்தை வடிவமைத்து மேற்பார்வையை மேற்கொள்கிறது.
ஓடுபாதை புனரமைப்பு மற்றும் கட்டட அமைப்பு பணிகளை, சீன தேசிய வான் பொறியியல் அனைத்துலக குழுமம் மற்றும் சங்காய் புதுயுக விமான நிலைய வடிவமைப்பு மற்றும் ஆய்வு நிறுவகம் ஆகியன இணைந்து மேற்கொள்கின்றன.
ஓடுபாதை மற்றும் விமான நிலைய விரிவாக்கப் பணிகள், காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நேரத்தில் விமான சேவைகள் முற்றாக இடம்பெறாது. நேற்றுத் தொடக்கம், நாளாந்தம் 8 மணிநேரம் விமான சேவைகள் தடைப்பட்டுள்ளன.
பகுதிநேரமாக விமான நிலையம் மூடப்படுவதால், சிறிலங்கன் விமான நிறுவனத்தின் ஆறு சேவைகளும், ஏனைய நிறுவனங்களின் நான்கு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஏனைய விமான சேவை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதனால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று கடும் நெரிசல் காணப்பட்டது.
விமான சேவை நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பயணிகள் நெரிசலைக் கருத்தில் கொண்டு, பயணிகளை 5 மணிநேரம் முன்னதாகவே விமான நிலையம் வருமாறு கோரப்பட்டுள்ளது.
விமான ஓடுபாதை புனரமைப்புப் பணிகள் வரும் ஏப்ரல் 5ஆம் நாள் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment