கர்ப்ப கால அஜீரணம்
கர்ப்பம் உறுதியான நாள் முதல் பிரசவிக்கிற தருணம் வரை ஒரு பெண் படும் அவதிகள் கொஞ்சநஞ்சமல்ல. தனக்காக இல்லாவிட்டாலும் தன் வயிற்றுக் கருவுக்காகவாவது பிடிக்காத உணவுகளையும் உண்ணக் கட்டாயப்படுத்தப்படுவாள். கர்ப்ப கால அவதிகளில் பெரும்பாலான பெண்களையும் அதிகம் தாக்குவது அஜீரணக் கோளாறு.சாப்பிடவும் முடியாமல், சாப்பிடாமல் இருக்கவும் முடியாமல்... அது ஒரு தினுசான அவதி.அந்தப் பிரச்னைக்கான காரணம் என்ன... அதிலிருந்து மீள்வது எப்படி? எளிமையாக விளக்குகிறார் மருத்துவர் நிவேதிதா.கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற அஜீரணக் கோளாறு கர்ப்பத்தின் முதல் மாதங்களில் ஹார்மோன் மாறுதல்களாலும், பின் மாதங்களில் குழந்தையின் வளர்ச்சி அதிகரித்து வயிற்றை அழுத்துவதாலும் ஏற்படுகிறது. கர்ப்பமாக இல்லாதவர்களுக்கு ஏற்படுகிற மாதிரியே நெஞ்செரிச்சலையும் எதுக்களித்து வருவது போன்ற உணர்வையும் தரக்கூடிய பிரச்னை இது. கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் இந்தப் பிரச்னை அதிகரிப்பதை உணரலாம்.
அதாவது, வயிறும், நெஞ்சும் எரிகிற மாதிரி இருக்கும். வயிற்றிலிருந்து உணவுக் குழாய்க்கு அமிலம் சுரந்து செல்வது போல இருக்கும். கொஞ்சமாக சாப்பிட்டாலும் மூச்சு முட்டுகிற மாதிரித் தோன்றும். ஏப்பம், வயிற்று உப்புசம். வாந்தி மற்றும் குமட்டல் வரும்.செரிமான மண்டலத்தில் உள்ள மென்மையான உள்பகுதி வழியே அமிலம் கடப்பதன் விளைவே நெஞ்செரிச் சலுக்கும், அஜீரணத்துக்கும் காரணம்.தவிர கர்ப்பத்துக்கு முன்பே அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு கர்ப்பமான பிறகும் அது தொடரலாம். எப்போதெல்லாம் இந்தக் கோளாறு அதிகரிக்கிறது, உங்களுடைய உணவுப்பழக்கம் எப்படியிருக்கிறது, வயிறு சம்பந்தமான வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா,சிகிச்சைகள் ஏதும் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா என்கிற கேள்விகளை எல்லாம் உங்கள் மருத்துவர் கேட்பார். அதன் பிறகே இதற்கான காரணத்தை உறுதி செய்து, சிகிச்சைகளையும் பரிந்துரைப்பார்.
பல நேரங்களில் உணவுப்பழக்கத்திலும், வாழ்க்கை முறையிலும் சிறிய மாறுதல்களை செய்வதன் மூலமே இந்தப் பிரச்னையில் இருந்து மீண்டுவிடலாம். அதையும் தாண்டி தொடர்கிற பிரச்னைக்கு மருந்துகள் தேவைப்படலாம். பெரும்பாலான அஜீரண மருந்துகள் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பானவைதான் என்றாலும் மருத்துவரின் பரிந்துரை முக்கியம்.அஜீரணத்துக்கான மருந்துகளில் ஆன்ட்டாசிட் மற்றும் ஆல்ஜினேட் என இரண்டு உண்டு. ஆன்ட்டாசிட் என்பது அஜீரணத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரக்கூடியது. வயிற்றுப்பகுதியில் அமிலச் சுரப்பைக் குறைத்து அல்லது சமநிலைப்படுத்துபவை.
ஆல்ஜினேட் வகை மருந்துகள், அமிலச் சுரப்பானது வயிற்றுப்பகுதியின் மென்மையான பகுதிகளில் பட்டு எரிச்சலைக் கிளப்புவதில் இருந்து காத்து நிவாரணம் அளிப்பவை.சரி... இந்தப் பிரச்னை வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்குமா என்கிற சந்தேகம் சிலருக்கு வரலாம். இந்தப் பிரச்னை சம்பந்தப்பட்ட கர்ப்பிணிக்குத்தான் சிரமத்தைத் தருமே தவிர குழந்தையை எந்த வகையிலும் பாதிக்காது.
இதிலிருந்து மீள சில வழிகள்...
*சாப்பிட்ட பிறகு குறைந்தது 1 மணி நேரமாவது நிமிர்ந்து உட்கார்ந்திருக்க வேண்டும். உடனடியாக படுக்கக் கூடாது.
*முதுகை வளைத்து அப்படியே கீழே குனிவது அஜீரணத்தை அதிகமாக்கும் என்பதால் உட்கார்ந்த நிலையிலோ, மண்டியிட்டோ வேலைகளைச் செய்யலாம்.
*மூன்று வேளைகள் வயிறு முட்ட சாப்பிடுவதற்குப் பதில் 6 வேளைகளாகப் பிரித்து சிறிது சிறிதாக உண்ணலாம்.
*எந்தமாதிரியான உணவுகள் அஜீரணத்தை ஏற்படுத்துகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். உதாரணத்துக்கு அதிக மசாலா மற்றும் கொழுப்பு சேர்த்தவை, சாக்லேட் போன்றவை.
*அதேபோல கஃபைன் மற்றும் ஆல்கஹால் கலந்த பானங்களும் இந்தப் பிரச்னையைத் தீவிரமாக்கலாம்.
*சிலருக்கு இரவில் மட்டும் செரிமானமின்மைப் பிரச்னை வரும். அவர்கள் தூங்கச் செல்வதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பாகவே இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.
*தலைப்பகுதியை லேசாக உயர்த்தியபடி வைத்துக் கொண்டு தூங்குவதும் சற்றே இதமாக இருக்கும்.
Post a Comment