Header Ads



முதலையுடன் செல்பி எடுக்கமுயன்றவருக்கு நேர்ந்த கதி


தாய்லாந்திலுள்ள தேசிய வனவிலங்குப் பூங்காவில் முதலையுடன் கைப்படம் (செல்ஃபி) எடுக்க முயன்ற பெண், அந்த முதலை கடித்ததால் படுகாயமடைந்தார்.

இதுகுறித்து "பாங்காக் போஸ்ட்' நாளிதழ் தெரிவிப்பதாவது:

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூரியல் பெனெட்லையர் என்ற 41 வயதுப் பெண், தனது கணவருடன் தாய்லாந்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சுற்றுலாப் பயணத்தின் ஒரு பகுதியாக, காவ் யாய் தேசிய வனவிலங்குப் பூங்காவை அந்தத் தம்பதி ஞாயிற்றுக்கிழமை சுற்றிப் பார்த்தனர். அப்போது அந்தப் பூங்காவிலுள்ள குளத்தில் ஒரு முதலை நீந்தி வருவதைக் கண்ட மூரல் பெனெட்லையர், அந்த முதலையுடன் கைப்படம் எடுக்க விரும்பினார்.

அதனைத் தொடர்ந்து அவர் அந்த முதலையின் முன்பு மண்டியிட்டு அமர்ந்து கைப்படம் எடுக்கத் தொடங்கினார்.

இந்த நிலையில், அந்த முதலை மூரல் பெனெட்லையர் மீது பாய்ந்து அவரது காலைக் கவ்வியது.

உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்த வனவிலங்குப் பூங்கா மீட்புக் குழுவினர், பெனெட்லையரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று "பாங்காக் போஸ்ட்' தெரிவித்துள்ளது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் முதலைகள் குறித்து எச்சரிக்கைப் பலகைகள் இருந்தும், மூரல் பெனெட்லையரின் கைப்பட மோகத்தால் இந்த அசம்பாவிதம் நேரிட்டுள்ளதாக வனவிலங்குப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.