Header Ads



ஷைத்தானின் உணவு..!

உணவு உண்பதற்கு முன்னால் ''பிஸ்மில்லாஹ்'' என்று கூற வேண்டும். இறைவனுடைய பெயரை கூறாமல் உணவு உட்கொண்டால் அந்த உணவு ஷைத்தானிற்கு செல்வதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

''பிஸ்மில்லாஹ் கூறப்படாமல் உண்ப்படுகின்ற உணவு தான் ஷைத்தானின் உணவாகும்''.

ஹுதைஃபா பின் அல்யமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது : நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் (சேர்ந்து) உணவு உண்பதற்கு அமர்ந்தால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதலிலில் கை வைப்பதற்கு முன் எங்கள் கைகளை (உணவில்) நாங்கள் வைக்கமாட்டோம்.

ஒரு முறை நாங்கள் உணவு உண்பதற்கு அவர்களுடன் அமர்ந்தோம். அப்போது ஒரு சிறுமி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவளைப் போன்று (விரைந்து) வந்து, (பிஸ்மில்லாஹ் சொல்லாமல்) உணவில் கை வைக்கப்போனாள்.உடனே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவளது கையைப் பிடித்துக்கொண்டார்கள். பிறகு ஒரு கிராமவாசி, (யாராலோ) தள்ளி விடப்பட்டவரைப் போன்று (விரைந்து வந்து பிஸ்மில்லாஹ் சொல்லாமல் உணவில் கை வைக்க) வந்தார்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரது கையையும் பிடித்துக் கொண்டார்கள்.அப்போது, "அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாத உணவில் ஷைத்தான் பங்கேற்கிறான். அவன் இச்சிறுமியுடன் வந்து, அவள் மூலமே இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, அவளது கையை நான் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன்.

பிறகு இந்தக் கிராமவாசியுடன் வந்து அவர் மூலம் இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, இவரது கையைப் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஷைத்தானின் கை அச்சிறுமியின் கையுடன் எனது கைக்குள் சிக்கிக்கொண்டது'' என்று கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 4105)

பிஸ்மில்லாஹ் என்று கூறி உணவு உண்ணும் போது ஷைத்தானால் அந்த உணவை உண்ண முடியாது. அந்த உணவின் பலன் முழுமையாக பிஸ்மில்லாஹ் கூறி உண்டவருக்கே செல்கிறது. எனவே பிஸ்மில்லாஹ் என்று கூறி உண்ணுவதன் மூலம் நம்முடன் ஷைத்தானை உண்ணவிடாமல் தடுக்கலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை'' என்று கூறுகிறான்.

ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது'' என்று சொல்கிறான்.

அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர்கூறாவிட்டால் ஷைத்தான் "இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்'' என்று சொல்கிறான். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4106)

ஷைத்தான் அருந்தும் பானம்

உண்ணுவதற்கு அனுமதிக்கப்பட்ட பொருளாக இருந்தாலும் இஸ்லாம் கற்றுத்தந்தவாறு உண்ண வேண்டும். இஸ்லாமிய முறைக்கு மாற்றமாக உட்கொண்டாலோ பருகினாலோ அந்த உணவும் பானமும் ஷைத்தானிற்கு செல்கிறது. இதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகிறது.

நின்று பருகக்கூடிய ஒரு மனிதரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்த போது ''வாந்தி எடு'' என்று (பருகியவரைப் பார்த்துக்) கூறினார்கள்.

அவர் ''ஏன்'' என்று வினவினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''நீயும் பூனையும் ஒன்றாக சேர்ந்து பருகுவதை விரும்புவீரா?'' என்று கேட்டார்கள். அவர் ''விரும்ப மாட்டேன்'' என்று கூறினார். (நீ நின்று குடித்த போது) பூனையை விட மோசமான ஷைத்தான் உன்னுடன் சோந்து பருகினான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 7662)

ஜின்களும், ஷைத்தான்களும் என்ற நூலில் இருந்து...

No comments

Powered by Blogger.