Header Ads



பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..!

நம் வாழ்வின் எல்லா தருணங்களிலும் பூக்கள் ஏன் இத்தனை முக்கியத்துவம் பிடித்திருக்கிறது என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அழகு, மென்மை, நிறம், வாசனை என்று நம் கண்ணுக்குத் தெரியும் அருமைகள் தாண்டி, நமக்குத் தெரியாத பல மகத்துவங்களையும் கொண்டவை பூக்கள். நவீன மருத்துவம் அதன் பெருமைகளை உணர்ந்துதான் அரோமா தெரபி என்ற தனி சிகிச்சை முறையையே பின்பற்றி வருகிறது. 

அரோமா தெரபிஸ்ட்டான கீதா அசோக்கிடம் பேசுவோம்...

‘‘பூக்கள் என்பது வெறுமனே அலங்காரப் பொருள் மட்டுமே அல்ல. அதற்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம், சித்த மருத்துவம் என எல்லாவித சிகிச்சையிலுமே பூக்கள் மற்றும் அதன் விதைகளிலிருந்து எண்ணெய்கள் பிரித்தெடுக்கப்பட்டு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக அரோமா தெரபி(Aroma therapy) என்ற நறுமண சிகிச்சையில் பூக்களுக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. இது கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவேப் பின்பற்றப்படும் முறை.

நமக்கு ஏற்படும் நோய்களுக்கு எதிர்மறை எண்ணங்களே பெருமளவு காரணமாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வெறுப்பு, அவநம்பிக்கை, பயம் போன்ற எதிர்மறை எண்ணங்களை நீக்கி, நேர்மறை சக்திகளை கிரகிக்கும் ஆற்றல் கொண்டவை என்பதாலும் அரோமா தெரபியில் பூக்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். வழிபாட்டுத்தலங்களில் பூக்கள் பயன்படுத்துவதற்குக் காரணமும் இதுதான்.மருத்துவரீதியாக இன்னும் கொஞ்சம் நுட்பமாகச் சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய நாசியில் Cilia எனப்படும் சின்ன சின்ன ரோமங்கள் இருக்கின்றன. நாம் சுவாசிக்கும் நறுமணம் இந்த சிலியாவின் மூலம் மூளையின் Limbic system என்ற பகுதிக்குச் செல்கிறது. லிம்பிக் சிஸ்டத்தின் மூலம் உடலின் மற்ற உறுப்புகளுக்கும் புத்துணர்வு ஏற்படுகிறது. அதுவே பூக்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை தடவிக் கொள்ளும்போது சருமத்தில் உள்ள துவாரங்கள் வழியாக 20 நிமிடத்துக்குள் புகுந்து புத்துணர்வைக் கொடுக்கிறது.மன அழுத்தம், தூக்கமின்மை, சைனஸ், மைக்ரேன் தலைவலி, கைகால் வீக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கு அரோமா தெரபி நல்ல தீர்வு. சிகிச்சை என்று மட்டும் அல்லாமல் பூக்களின் பயன்பாட்டை தினசரி வாழ்விலேயே சேர்த்துக் கொள்வதும் ஒரு நல்ல வழிதான்” என்கிறார்.

No comments

Powered by Blogger.