''எதிர்ப்புகளுக்கு அடையாளம் தெரியாத, நாட்டின் சதியே காரணம்.”
அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை தோற்கடிக்க வெளிநாட்டுச் சதி ஒன்று இருக்கலாம் என்று சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
பதுரகொடவில் மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘தாய்லாந்தில் சீனாவின் நிதியுதவியுடன் கால்வாய் அமைக்கும் பணி நிறைவடைந்தால், தெற்காசியாவின் முக்கியமான நாடு ஒன்று சிறிலங்காவுக்கான வர்த்தகத்தை இழக்கும். அந்த நாடே, அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை எதிர்க்கின்ற பின்னணியில் இருக்கக் கூடும்.
அந்தமான் கடல் வழியாக தாய்லாந்து வளைகுடாவையும், தெற்கு தாய்லாந்தையும், இணைக்கும் செயற்கை கால்வாய் ஒன்றை சீனாவின் நிதியுதவியுடன் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 21ஆவது நூற்றாண்டு பட்டுப் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது அமைக்கப்படவுள்ளது.
கரா கால்வாய் என்று அழைக்கப்படும் தாய் கால்வாய் பணிகள் முடிந்ததும், தென்சீனக் கடல் பகுதியில் இருந்து, இந்தியப் பெருங்கடலுக்குள் செல்வதற்கான பயண நேரம் கணிசமாக குறையும்.
அவ்வாறு நடந்தால், குறிப்பிட்ட நாடு வழியாக இடம்பெறும் கப்பல்களின் பயணங்கள் குறையும். அம்பாந்தோட்டைக்கு வருவதற்கான பயண நேரம் ஐந்து நாள்களால் குறைவடையும்.
இந்தக் கால்வாயினால், அம்பாந்தோட்டை மற்றும் கொழும்புத் துறைமுகங்கள் மேலும் பலமடையும்.
அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு எதிர்ப்புகள் எழுவதற்கு, அடையாளம் தெரியாத அந்த நாட்டின் சதியே காரணமாக இருக்கலாம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment