Header Ads



மரண தண்டணைக்கைதி துமிந்த, தப்பிச்செல்ல திட்டம் - விசாரணை ஆரம்பம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் படுகொலை தொடர்பில் துமிந்த சில்வா உள்ளிட்ட சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவரான தெமட்டகொட சமிந்த, துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேர் வெலிக்கடை சிறையிலிருந்து தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்கு மூலம் ஒன்றை அளிக்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க நேற்று -16- உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடங்களுக்கு பொறுப்பான சிறைச்சாலை அதிகாரியையும் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுர துஸாச டி மெல், சிறிநாயக்க பதிரனலாகே சமிந்த ரவி ஜயனாத், கோவில்லே கெதர திஸாநாயக்க முதியன்சேலாகே சரத் பண்டார, சீ.எம். பிரியந்த ஜனக பண்டார மற்றும் அருமதுர லோரன்ஸ் ரெமோலோ துமிந்த சில்வா ஆகியோர் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தனர் என புலனாய்வுப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த சந்தேக நபர்கள் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தனர் என இலத்திரனியல் ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த கைதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், கைதிகளை அவர்களது உறவினர்கள் நண்பர்கள் சந்திப்பதற்கு செய்யப்பட்டுள்ள ஒழுங்குகள், கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்தனர் என்பது குறித்து சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் தகவல் வழங்கினார்களா போன்றன குறித்து சிறைச்சாலை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அனுமதியளிக்குமாறு நீதிமன்றிடம் புலனாய்வுப் பிரிவினர் கோரியிருந்தனர்.

1979ம் ஆண்டு 15ம் இலக்க குற்றவியல் சட்டத்தின் 124ம் சரத்தின் அடிப்படையில் நீதிமன்றில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விசாரணை நடாத்த அனுமதியளித்துள்ளது.

இதேவேளை, புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.ஏ.எஸ் ரஞ்சித் இது குறித்த விடயங்களை நீதிமன்றிற்கு அறிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.