ரோஹிங்கியா முஸ்லிம்களை, ஆபத்தில் தள்ளும் பங்களாதேஷ்
ஆயிரக்கணக்கான ரொஹிங்கியா முஸ்லிம் அகதிகளை வங்காள விரிகுடாவில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய தீவொன்றுக்கு அனுப்ப பங்களாதேஷ் அரசு முடிவு செய்துள்ளது.
இவர்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்புவதற்கு முன்னர் தன்கர் சார் தீவுக்கு இடமாற்றப்படுவார்கள் என்று பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது.
உயர்ந்த அலை காரணமாக பல அடிகள் நீரால் மூழ்கக் கூடிய தன்கர் சார் தீவில் பாதைகள் அல்லது உணவு வசதி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீவு மெக்னா நதியால் ஒரு தசாப்தத்திற்கு முன் தோன்றிய வண்டல் பிரதேசமாகும். பெரும்பாலான வரைபடங்களிலும் இந்த தீவை காணமுடிவதில்லை. ஹடியா தீவின் கிழக்காக 30 கிலோமீற்றர் கொண்ட தாழ்வான நிலமாக இந்த தீவு உள்ளது.
இந்த தீவில் மக்களை குடியமர்த்துவது மிக பயங்கரமான யோசனை என்று பிராந்திய அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். இந்த தீவை குளிர்காலத்தில் மாத்திரமே அணுக முடியும் என்றும் கடற்கொள்ளையரின் புகலிடமாக இது இருப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். மியன்மாரில் ரொஹிங்கியாக்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதோடு பங்களாதேஷின் சட்டவிரோத குடியேறிகளாகவே அவர்களை அந்த நாடு நடத்துகிறது. எனினும் அவர்களை பங்களாதேஷும் வரவேற்பதில்லை.
வன்முறை காரணமாக மியன்மாரின் மேற்கு மாநிலமான ரகினேவில் இருந்து கடந்த ஒக்டோபர் தொடக்கம் 65,000 ரொஹிங்கியாக்கள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளனர். ஏற்கனவே பங்களாதேஷில் சுமார் 232,000 ரொஹிங்கியா அகதிகள் உள்ளனர். இவர்கள் மோசமான வசதிகள் கொண்ட முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
Post a Comment