இனிமேலும அந்த போலி உலகம், எமக்கு தேவையா..?
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக அன்றி, இருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி தெரிவிக்கிறார்.
வறுமையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள பாரிய செயற்திட்டங்களுடன் இணைந்து காலத்தின் தேவையை நிறைவேற்றுமாறு அனைவரையும் அழைப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற “பேண்தகு யுகம் - மூன்றாண்டு உதயம்” நிகழ்வில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டில் நாட்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் பிரதான செயற்திட்டமாக கிராம சக்தி தேசிய இயக்கம் இந்த மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென தெரிவித்த ஜனாதிபதி கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசன துறைகளில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், பல புதிய செயற்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
கடந்தகால அரசாங்கத்தையும் தற்போதய அரசாங்கத்தையும் ஒப்பிட்டு சிலர் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான வேறுபாடுகள் தொடர்பில் குற்றம் சாட்டிய போதிலிலும் அன்று கண்ட அழகிய அபிவிருத்தியின் பெறுபேறாக 9 இலட்சம் கோடி ரூபா கடன் சுமை நாட்டுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி இனிமேலும அந்த போலி உலகம் எமக்கு தேவையா அல்லது தேசிய பொருளாதாரத்தின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் இணைந்து கொள்வதா என்பதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நன்மை கருதி தீர்மானங்கள் எடுக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எதிர்கால அதிகார கனவுடன் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென தெரிவித்த ஜனாதிபதி, நல்லாட்சி அரசாங்கம் நல்லாட்சி கொள்கைகளை மதித்து பலமான அரசாங்கமாக முன்னோக்கி செல்லுமெனவும் பொருளாதார ரீதியில் சுபீட்சம் மிக்க இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கத்துக்கு ஆற்றல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
Post a Comment