சவூதியில் இலங்கை பெண்ணுக்காக, தூதரகம் தொடுத்த வழக்கு - கிடைத்தது ஊதியம்
(ரெ.கிறிஷ்ணகாந்)
சவூதி அரேபிய ரியாத் நகரில், தான் பணிபுரிந்த இரண்டு வருடங்களில் ஒரு வருடம் எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படாத நிலையில் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்ட இலங்கை பெண் ஒருவருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முயற்சியினால் குறித்த வருடத்துக்கு உரிய பணம் பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி அவருக்கு சுமார் ஆறரை லட்சம் ரூபா சட்டரீதியாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தை சேர்ந்த செல்லத்துரை ஜேக்லின் (30) என்ற இந்த இளம் தாய் 2013 ஆம் ஆண்டு பணிப் பெண்ணாக சவூதி சென்றுள்ளார்.
அதன்போது, இப்பெண் பணியாற்றி வந்த வீட்டின் உரிமையாளரினால், அவருக்கு முதல் வருடத்தில் கொடுப்பனவு வழங்கப்பட்ட போதும் இரண்டாவது வருடத்தில் எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அப்பெண்ணினால் ரியாத்திலுள்ள இலங்கை தூதரகத்திலும் அவரது உறவினர்களால் இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திலும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பிரதி பலனாக, இலங்கை தூதரகத்தின் மூலமாக அந்நாட்டு தொழில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, வழங்கப்படாமலிருந்த ஜேக்லினின் மிகுதி கொடுப்பனவான 17, 000 ரியால் (இலங்கை நாணய பெறுமதியின்படி 6 லட்சத்து 77 ஆயிரத்து 167 ரூபா) அவ்வீட்டு உரிமையாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இப்பெண் இலங்கையை வந்தடைந்த தினத்திலேயே அவரது மிகுதி கொடுப்பனவுக்கான காசோலையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஆர்.கே.ஒபே சேகர அவரிடம் கையளித்திருந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Well done
ReplyDelete