''தவக்கல்'' அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருத்தல்..!
நான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ''நீங்கள் அல்லாஹ்வின் மீது சரியான முறையில் நம்பிக்கை வைத்து அவனையே சார்ந்திருந்தால் அவன் உங்களுக்கு உணவளிப்பான், குருவிகளுக்கு உணவளிப்பது போல்! அவை காலை நேரத்தில் உணவு தேடிய வண்ணம் தம் கூடுகளை விட்டு புறப்படுகின்றன. அப்போது அவற்றின் வயிறுகள் மெலிந்து காலியாக இருக்கின்றன. மாலையில் தம் கூடுகளுக்கு திரும்பி வரும் போது அவற்றின் வயிறுகள் நிரம்பியிருக்கின்றன.'' (அறிவிப்பாளர் : உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு, நூல் திர்மிதி)
தனக்காக அல்லாஹ் நிர்ணயிப்பதை(விதிப்படி கிடைக்கும் வாழ்வாதாரத்தை) ஏற்றுத் திருப்தி கொள்வதும் அதனைப் போதுமானதாக்கிக் கொள்வதும் மனிதனின் நற்பேறாகும். அல்லாஹ்விடம் நன்மையைக் கோரி இறைஞ்சாமலிருப்பது மனிதனின் துர்பாக்கியமாகும். அல்லாஹ்வின் கட்டளையைக் குறித்தும் தீர்ப்பைக் குறித்தும் அதிருப்தி கொள்வது மனிதனின் துர்பாக்கியமேயாகும். (அறிவிப்பாளர் : உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு, நூல் திர்மிதி)
விளக்கம்:
தவக்குல் என்பதன் பொருள் அல்லாஹ்வைத் தன் பொருப்பாளன் (வகீல்) ஆக்கிக் கொள்வதும், அவன் மீது முழு நம்பிக்கை வைப்பதும் ஆகும். நன்மைக்காகவும் சீர்திருத்தத்திற்காகவும் சிந்தித்து தீமைகளிலிருந்து காப்பாற்றுபவரை பொருப்பாளன் (வகீல்) என்று குறிப்பிடுவர்.
இறைநம்பிக்கையாளனின் பொருப்பாளன் அல்லாஹ்வே ஆவான். இதன் கருத்து: அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வருவது எல்லாமே நன்மையானது தான். அல்லாஹ் எந்நிலையில் என்ன வைக்கின்றானோ அதனைக் குறித்து நான் திருப்தியாக மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்று இறைநம்பிக்கையாளன் நம்பிக்கை வைக்கின்றான். தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறான். பின்னர் தன் விவகாரத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகின்றான். மேலும் ,இறைவா! பலவீனமான அடியானாகிய நான் இந்தப் பணியை ஆற்றிட முழுமையாக முயற்சி செய்துவிட்டேன். நான் பலவீனனாகவும் சக்கியற்றவனாகவும் இருக்கின்றேன். இந்தப் பணியில் உள்ள குறைபாட்டை நீ நிறைவு செய்து விடு! நீ மிகைத்தவன், ஆற்றலுடையவன்!
ஒரு மனிதர் வினவினார்: 'அல்லாஹ்வின் தூதரோ! நான் ஒட்டகத்தைக் கட்டி வைத்துவிட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை(தவக்குல்) வைப்பதா? அல்லது அதனைக் (கட்டாமல்) அப்படியே அவிழ்த்து விட்டுவிட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதா?' அதற்கு அண்ணலார், 'அதனை நீர் கட்டி வைத்து பிறகு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையும்!' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : அனஸ்(ரலி), நூல் : திர்மிதி)
விளக்கம்:
ஒரு பொருளை அடைந்திட என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அவை அனைத்தையும் முழுமையாகச் செய்து முடித்துவிட்டு நான் என்னால் முடிந்த முயற்சிகளையெல்லாம் செய்து முடித்துவிட்டேன் என்று ,றைஞ்ச வேண்டும். இது தான் அல்லாஹ்வையே நம்பி அவனையே முழுக்க முழுக்கச் சார்ந்து நின்று அவனிடமே நம் பொருப்புக்களை ஒப்படைக்கும் தவக்குல் எனும் பண்பாகும்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்:
மனிதனின் உள்ளம் ஒவ்வொரு கணவாயிலும் அலைந்து திரிந்த வண்ணமிருக்கின்றது. எவன் தன் உள்ளத்தைக் கணவாய்களில் தடுமாறித் திரிந்திட அனுமதிக்கின்றானோ அவனை எந்தக் கணவாய் அழித்து நாசமாக்கிவிடுகின்றது என்பது பற்றி அல்லாஹ்வுக்குக் கவலை ,ல்லை. எந்த மனிதர் அல்லாஹ்வையே நம்பி அவனையே சார்ந்துவிடுகின்றாரோ அல்லாஹ் அவரை அந்தக் கணவாய்களிலிருந்தும், பாதைகளிலிருந்தும், தடுமாறி அலைவதிலிருந்தும், அழிந்து போவதிலிருந்தும் காப்பாற்றுவான். (அறிவிப்பாளர் : அம்ருப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா)
விளக்கம்:
மனிதன் அல்லாஹ்வைத் தன் பொறுப்பாளனாகவும் பாதுகாவலனாகவும் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அவனது உள்ளம் எப்போதும் திகைப்பிலாழ்ந்து கவலையுடனிருக்கும். பல்வேறு வகைப்பட்ட உணர்வுகளின் உறைவிடமாகவே இருக்கும். ஆனால் உள்ளத்தை அல்லாஹ்வின் பால் திருப்பிவிடும் மனிதனுக்கு மன ஓர்மை கிடைக்கும்.
جَزَاكَ اللَّهُ خَيْرًا: அப்துர் ரஸாக்
நல்லதோர் தெளிவு...
ReplyDeleteஜஸாகல்லாஹூ கைர்...