Header Ads



''உயிர்துறக்க தயாராக இருக்கின்றேன்” - பாராளுமன்றத்தில் விமல்

“ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை நான் ஓயப் போவதில்லை. அதற்காக உயிரை துறக்கவும் தயாராக இருக்கின்றேன்” எனத் தெரிவித்த விமல் வீரவன்ச எம்.பி, “பேய்க்குப் பயந்தால், இடுகாட்டுக்கு (மயானம்) போகமுடியாது” என்று கூறினார்.  

நாடாளுமன்றத்தில், நேற்று நடைபெற்ற மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் பற்றிய அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவின் (கோப்) விசாரணை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றம் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

கடந்த ஆட்சி காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் விமல் வீரவன்ச எம்.பி, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  எனினும், சிறைச்சாலை வாகனத்தில், நாடாளுமன்றத்துக்கு வருகைதந்திருந்த அவர், மேற்படி விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.   அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

“மத்திய வங்கி, கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையிட்டுள்ளது, இதற்கான முழுப்பொறுப்பையும் நல்லாட்சியே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அவற்றினை மூடி மறைத்து வருகின்றது. ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இந்த மோசடியுடன் தொடர்பு உண்டு. ஆனால் அரசாங்கம் அதனை கண்டு கொள்ளவில்லை.  எவ்வாறாயினும், இந்த முறைகேடான ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாமல் விடமாட்டோம். ஆயிரம் சிறைச்சாலைகளில் அடைத்தாலும் நான் ஓயப்போவதில்லை. அதேபோல ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, என் உயிரை வேண்டுமானாலும் மாய்த்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றேன்” என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.