நீர்மூழ்கிக் கப்பல் அணுஆயுத ஏவுகணையை, பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதித்தது
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தக் கூடிய அணுஆயுத வல்லமை கொண்ட ஏவுகணையை, பாகிஸ்தான் திங்கள்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்தது.
இந்தியப் பெருங்கடலில் இந்த சோதனை நடைபெற்றுள்ள போதிலும், எந்தப் பகுதியில் நடத்தப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"பாபர்-3' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானின் முதல் ஏவுகணையாகும். அணு வெடிபொருளை சுமந்து சென்று, சுமார் 450 கிமீ பாய்ந்து இலக்கை தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை, திங்கள்கிழமையன்று பரிசோதிக்கப்பட்டது.
அதன்படி, கடலுக்கடியில் இருந்து செலுத்தப்பட்ட பாபர்-3 ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது. இந்த வெற்றி, நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாபர்-3 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக, விஞ்ஞானிகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெஃரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல, விஞ்ஞானிகளுக்கு முப்படைகளின் தலைமைத் தளபதிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Post a Comment