Header Ads



ட்ரம்பின் முடிவு, குருட்டுத்தனமானது - அமெரிக்க முஸ்லிம்கள் எதிர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பெரும்பாலான அகதிகளுக்கு தற்காலிக தடை, சில முஸ்லிம் நாட்டு பிரஜைகளுக்கு விசா இடைநிறுத்தம் போன்ற அதிரடியான உத்தரவுகளில் இந்த வாரம் கையெழுத்திட திட்டமிட்டுள்ளார்.
இதில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கு இடையில் சுவர் எழுப்பும் திட்டத்திற்கும் டிரம்ப் உத்தரவு பிறப்பிக்கவுள்ளார்.
இதன்படி அடுத்த ஒருசில தினங்களில் குடியேற்றம் மற்றும் எல்லை பாதுகாப்பு தொடர்பில் நிர்வாக உத்தரவுகளை பிறப்பிக்க எதிர்பார்த்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒரு முக்கியமான தினத்திற்கு திட்டமிட்டிருப்பதாக டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதில் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய பல மாதங்கள் தடைவிதிக்கும் உத்தரவிலும் டிரம்ப் கைச்சாத்திட திட்டமிட்டுள்ளார். எனினும் துன்புறுத்தலில் இருந்து தப்பிய மதச் சிறுபான்மையினருக்கு மாத்திரம் இதில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
பிறப்பிக்கப்படவிருக்கும் மற்றுமொரு உத்தரவில், சிரியா, ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் யெமன் நாடுகளின் பிரஜைகளுக்கான அமெரிக்க விசா நிறுத்தப்படவுள்ளது.
டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், “நாளை (புதன்கிழமை) தேசிய பாதுகாப்பு திட்டத்திற்கான முக்கிய நாளாகும். மேலும் பல விடயங்களோடு நாம் சுவரை கட்டுவோ!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எல்லை பாதுகாப்பு நடவடிக்கையில் மெக்சிகோ எல்லையில் நேரடி நிதி மூலம் சுவர் எழுப்பும் திட்டமும் உள்ளடக்கப்படும் சாத்தியம் உள்ளது. அதேபோன்று அமெரிக்காவில் வாழும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
மெக்சிகோ எல்லையில் 2000 மைல்கள் தூரத்திற்கு சுவர் எழுப்புவது, டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
இந்த அதிரடி உத்தரவுகளில் முதல் உத்தரவில் ஒபாமா நேற்று கையெழுத்திட இருந்தார். எல்லை பாதுகாப்பை பலப்படுத்திய பின் அடுத்து வரும் நாட்களில் அகதிகள் விடயத்தில் அவதானம் செலுத்த டிரம்ப் எதிர்பார்த்துள்ளார்.
அதேபோன்று சட்டவிரோத குடியேறிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நகரங்கள் அந்த குடியேறிகளை நாடுகடத்துவதற்கு நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவும் டிரம்ப் நடவடிக்கை எடுக்கவுள்ளார்.
டிரம்ப்பின் உத்தரவுப்படி அகதிகளுக்கு அமெரிக்கா 120 நாட்களுக்கு அனுமதி மறுக்கும் என்றும் சிரிய யுத்தத்தில் இருந்து தப்பிவருபவர்களும் அடங்குவார்கள் என்றும் குடியேறிகள் தொடர்பான நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோன்று முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் சிலதைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க விசா வழங்குவது 30 நாட்டுகளுக்கு நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அந்த நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இந்த முஸ்லிம் நாடுகளின் மதச் சிறுபான்மையினருக்கு விசா தடையில் விதிவிலக்கு அளிக்கப்படவுள்ளது. இந்த விதிவிலக்கு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு பொருந்துவதாக இருக்கும்.
அமெரிக்க முஸ்லிம் சமூக தலைவர்களில் ஒருவரான நிஹாத் அவாத், இந்த முடிவு ‘குருட்டுத்தனமான கொள்கை’ என்று சாடியுள்ளார். இது “அமெரிக்காவை பாதுகாப்பான இடமாக மாற்றாது” என்றும் அவர் கூறினார்.
டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் முஸ்லிம்களுக்கு அமெரிக்கா வர முழு தடை விதிப்பதாக கூறி சர்வதேச அளவில் விமர்சனத்திற்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா 2012 இல் அறிமுகம் செய்த சிறுவர் வருகை திட்டத்தையும் அகற்றப்போவதாக டிரம்ப் உறுதி அளித்திருந்தார். இந்த திட்டத்தின் கீழ் சிறு குழந்தைகளுடன் ஆவணம் இன்றி அமெரிக்கா வந்த 750,000க்கும் அதிகமான குடியேறிகளுக்கு நாடுகடத்தப்படும் அச்சுறுத்தல் இன்றி தொழில்களில் ஈடுபட முடியுமாக உள்ளது. 

2 comments:

Powered by Blogger.