முஸ்லிம் திணைக்கள கட்டடத்தை திறந்துவைத்து, ஜனாதிபதி ஆற்றிய உரை
தமிழ், முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக நல்லிணக்கத்துடன் வாழும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் மீண்டும் ஓரு யுத்தம் ஏற்படாதிருக்கவும் புதிய அரசாங்கம் திட்டமிட்டு செயற்படும்போது அடிப்படைவாதிகளும் அரசுக்கு எதிரானவர்களும் அரசுக்கு எதிராக தவறான கருத்துக்களைப் பரப்பி இன ஒற்றுமையைக் குலைக்க முயற்சிக்கின்றனர்.
இதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று மாலை கொழும்பு 10 ரீ.பி.ஜயா மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய முஸ்லிம் பண்பாட்டு திணைக்கள கட்டடத்தொகுதியை திறந்து வைத்து உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தையும் திறந்து வைத்தார்.
ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,
எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும். தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகத்தில் அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள். இவர்களே நாட்டுக்கு எதிராகவும் இன நல்லிணக்கத்துக்கு எதிராகவும் சூழ்ச்சி செய்கிறார்கள்.
நாம் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இதனை எதிர்க்க வேண்டும். ஒவ்வொரு இனத்திலும் தலைவர்கள் அடிப்படைவாதத்துக்கு இடமளிக்கக் கூடாது.
நாட்டில் அனைத்து மதங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் தத்தமது சமய, கலாசார, மொழி அடையாளங்களை உறுதிப்படுத்திக்கொண்டு வாழ்வதற்கு அரசாங்கம் சுதந்திரம் வழங்கியிருக்கிறது. அவர்களுக்கான உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதனால் நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
எமது நாட்டை வெளிநாட்டவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு சுதந்திரம் பெற்றுக்கொள்வதற்கு 1940ஆம் ஆண்டுகளில் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் போராட்டங்கள் நடத்தியதாக வரலாறு தெரிவிக்கிறது.
அன்று அவர்கள் இன நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக போராடியதாலே 1948 இல் எமக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை நாம் மறந்து விடலாகாது. அன்று அனைத்து இனமக்களும் ஒற்றுமையாக செயற்பட்டதனாலேயே எமது நாட்டிற்கு அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது என்பதை சிலர் மறந்து விட்டனர்.
இந்நாட்டை அபிவிருத்தியின் பால் முன்னெடுக்க ஒற்றுமை அவசியமாகும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழும் சூழல் உருவாக்க முயற்சிக்கும் போது சில சக்திகள் இதற்கு எதிராகச் செயற்படுகின்றன
. நாம் அனைவரும் குரோதம், வைராக்கியம், சந்தேகம், பொறாமை, போட்டி இல்லாது சுதந்திரமாக வாழப்பழகிக் கொள்ளவேண்டும்.
62 இலட்சம் மக்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் பேதங்களின்றி ஒன்றிணைந்து என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள். எனது வெற்றிக்கு உதவி செய்தார்கள். இந்த ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க வேண்டும்.
இந்தப் புதிய கட்டடத் தொகுதிக்கு 52 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. கட்டடம் சிறந்தவோர் இடத்தில் அழகாக அமைவதினால் மாத்திரம் பயன்படப் போவதில்லை. இக்கட்டடத்தில் தொழில் செய்பவர்கள், வாழ்பவர்கள் தமது பொறுப்பை உணர்ந்து சகோதர உணர்வுடன் பணிபுரிய வேண்டும். மொழி, சமயம், கலாசாரம், என்று பேதங்கள் நிலவக்கூடாது. மக்கள் ஒற்றுமையாக நல்லுறவுடன் வாழ வேண்டும் என்றே அனைத்து சமயங்களும் போதித்துள்ளன. நாட்டில் நல்லிணக்கம் உருவாக, நாடு செழிப்புற, நாம் அனைவரும் உறுதி பூணுவோம் என்றார்.
முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமினால் ஜனாதிபதி பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். ஜனாதிபதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நினைவு புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.
நிகழ்வில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் , ரிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், காதர் மஸ்த்தான், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார பிரதி அமைச்சர் டுலிப் விஜயசேகர, வெளிநாட்டு தூதரங்களின் அதிகாரிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ARA.Fareel
Post a Comment