டிரம்ப்பின் உத்தரவு - அமெரிக்கா எங்கும் ஆர்ப்பாட்டம்
உலகின் ஏழு பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேற வருவோருக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடைக்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்கள் மற்றும் விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டிரம்ப்பின் உத்தரவை அமுல்படுத்தும் அமெரிக்க விமான நிலையங்களில் கடந்த சனிக்கிழமை தன்னிச்சையான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடிய நிலையில் ஞாயிறன்றும் நியூயோர்க்,வொஷிங்டன் மற்றும் பொஸ்டன் என பல நகரங்களில் எதிர்ப்பு பேரணிகள் இடம்பெற்றன.
கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவின்படி, தேசிய பாதுகாப்பு அடிப்படையில் சிரியா, ஈராக், ஈரான் மற்றும் மேலும் நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தற்காலிக தடை விதிக்கப்பட்டதோடு சிரிய அகதிகளுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டது.
ஞாயிறு இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஒன்று நியூயோர் துறைமுகத்தின் சுதந்திர தேவி சிலை தெரியும்படியான தூரத்தில் லோவர் மான்ஹட்டனில் நடைபெற்றது. சுதந்திர தேவி சிலை கடற்கரையில் அமெரிக்கா வரவேற்பதற்கான சின்னமாக உள்ளது.
கிட்டத்தட்ட 10,000 பேர் வரை கூடிய அந்த பேரணி அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அலுவலகத்தை நோக்கி சென்றது. மறுபுறம் வொஷிங்டனில் வெள்ளை மாளிகையை சூழவுள்ள லபியட் சதுக்கத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர். “வெறுப்புணர்வுக்கு இடமில்லை. பயத்திற்கு இடமில்லை. அகதிகள் இங்கு வரவேற்கப்படுவார்கள்” என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
வொஷிங்கடனில் தொடர்ச்சியாக இரண்டாவது வார இறுதியிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாக இது அமைந்தது. கடந்த வாரம் சனிக்கிழமை இடம்பெற்ற டிரம்ப் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றிருந்தனர்.
வெள்ளை மாளிகைக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்திய பலரும் அங்கிருந்து பென்சிவேனியா வீதி ஊடாக பேரணி சென்று டிரம்ப் சர்வதேச ஹோட்டலுக்கு முன்னர் நின்று, “வெட்கம், வெட்கம், வெட்கம்” என்று கூச்சலிட்டனர்.
இறுதியில் சுமார் 8,000 பேர் வரையான ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க கபிடல் கட்டடத்திற்கு முன்னால் அணிவகுத்துள்ளனர்.
அமெரிக்காவின் விமான நிலையங்களிலும் ஞாயிறன்று அர்ப்பாட்டம் இடம்பெற்றது. டிரம்ப்பின் முடிவுக்கு சர்வதேச அளவிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்ற தடை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவரும் நிலையிலும், டிரம்ப் நிர்வாகம் அவ்வுத்தரவை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ளது.
ஜனாதிபதி டிரம்ப் இது குறித்து விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், “மிகவும் பாதுகாப்பான கொள்கைகள்” கொண்டுவரப்பட்ட உடன், விசாக்கள் மீண்டும் கொடுக்கப்படும் என்று கூறினார். இது முஸ்லிம்கள் மீதான தடை என்று கூறப்படுவதை அவர் மறுத்தார்.
இந்த உத்தரவு அமெரிக்க அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று 16 மாநிலங்களின் தலைமை அரச வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
எனினும் ஜனாதிபதி டிரம்ப்பின் நிர்வாக உத்தரவுகளை தொடர்ந்து அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
Post a Comment