சீனாவில் இருந்து லண்டனுக்கு, நேரடி ரயில் சேவை
ஐரோப்பாவுடனான தனது வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்காக, ரயில் சேவை மூலம் நேரடியாக லண்டனுக்கே பொருட்களை அனுப்பத் தொடங்கியுள்ளது சீனா.
இதன்படி, பொருள் வர்த்தகத்தில் முன்னணியில் விளங்கும் சீனாவின் யிவு நகரில் இருந்து முதன்முறையாக ரயில் ஒன்று பொருட்களுடன் லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளது.
சுமார் 12 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவை பதினெட்டே நாட்களில் இந்தத் ரயில் கடந்து விடும் என்று சீனா தெரிவித்துள்ளது.
இந்தப் பயணத்தின்போது குறித்த ரயிலானது கஸகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் ஃப்ரான்ஸ் வழியாக லண்டனைச் சென்றடையும்.
ஐரோப்பாவுடன் நெருங்கிய வர்த்தக உறவுகளைப் பேணிவரும் சீனா ஏற்கனவே சில ஐரோப்பிய நாடுகளுக்கு ரயில் வழியாகப் பொருட்களை அனுப்பி வருகிறது. அந்த வரிசையில், லண்டனும் தற்போது இணைந்துள்ளது.
ரயில் மூலம் பொருட்களை அனுப்புவது வான்வழி அனுப்புவதைவிட 50 சதவீதம் செலவைக் குறைக்க முடியும் என்பதுடன், கப்பல் மூலம் அனுப்புவதைவிட 50 சதவீத கால விரயத்தையும் தவிர்க்க முடியும் எனவும் இந்தச் சேவையை நடத்திவரும் யிவு டைமெக்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மன்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment