Header Ads



முஸ்லிம் சமூகம் இழந்த, அபூ தாலிப் நீதிபதி வீரமன்த்ரி

(நவமணி பத்திரிகையின், ஆசிரியர் தலையங்கம் இது)

நீதிபதி சீ.ஜி. வீரமன்த்ரி இம்மாதம் 05 ஆம் திகதி மரணமானார். இவரின் மரணம் பொதுவாக இலங்கையர்களையும், குறிப்பாக இலங்கை முஸ்லிம்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையில் பிறந்த ஒரு மாபெரும் சட்டத்துறை அறிஞராகவும், நேர்மையான மனிதராகவும் வீரமன்த்ரி பார்க்கப்படுகிறார்.

Image may contain: text இலங்கை நீதிமன்றங்களின் நீதிபதியாகவும், சர்வதேச நீதிமன்றத்தின் உபதலைவராகவும் செயற்பட்ட நீதிபதி வீரமன்த்ரி, அவரது “இஸ்லாமிய சட்டவியல்: ஒரு சர்வதேசப் பார்வை” என்ற நூலின் வாயிலாகவே இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பெருமளவு அறிமுகமாயிருந்தார்.

இஸ்லாத்தின் சட்டத்துறை குறித்த மிகவும் ஆழ்ந்த பார்வையுடன் அப்புத்தகத்தை நீதிபதி வீரமன்த்ரி எழுதியுள்ளார். இஸ்லாமிய விவகாரம் குறித்து முஸ்லிம் அல்லாத ஒருவரின் மிகவும் நேர்மையான ஆய்வாக அது கருதப்படுகிறது.

1926 நவம்பர் 17 ஆம் திகதி கொழும்பில் பிறந்த கிறிஸ்தோபர் க்ரெகரி வீரமன்த்ரி, கொழும்பு ரோயல் கல்லூரியில் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்தார். பாடசாலைக் காலத்திலேயே, பாடவிதானச் செயற்பாடுகளிலும் இவர் சிறந்து விளங்கினார். பாடசாலையின் மாணவத் தலைவராகவும், பாடசாலை சஞ்சிகையின் ஆசிரியராகவும் வீரமன்த்ரி செயற்பட்டார்.

பாடசாலைக் கல்வியின் பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறைப் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். பின்னர் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இணைந்து, சட்டத்துறையில் பட்டப்படிப்பையும், கலாநிதிப் படிப்பையும் நிறைவு செய்தார்.

1967 முதல் 1972 வரை இலங்கை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக கடமையாற்றிய வீரமன்த்ரி, அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னா, அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராக பணியாற்றினார்.

அத்தோடு, அமெரிக்காவின் ஹாவட் பல்கலைக்கழகம், ஹொங்கொங் பல்கலைக்கழகம், புளோரிடா பல்கலைக்கழகம், பபுவா நியூ கினியா பல்கலைக்கழகம், டோக்கியோ பல்கலைக்கழகம் என்பவற்றில் வருகை தரு பேராசிரியராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

1991 இல் சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்ற வீரமன்த்ரி, 1997 இல் அதன் உபதலைவராகவும் நியமிக்கப்பட்டார். அவர் உபதலைவராக செயற்பட்ட காலப்பகுதியில், அணு ஆயுதப் பயனப்பாடு சட்டரீதியற்றது என்ற தீர்ப்புக்களை வழங்கியிருந்தார்.

சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒரே ஒருவர் என்ற சிறப்பு வீரமன்த்ரிக்கு உள்ளது. அதேபோன்று, இஸ்லாமிய சட்டம் குறித்து அடிப்படையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற இக்காலப் பகுதியில், இஸ்லாமிய சட்டத்தை மிகவும் நேர்மையாக ஆய்வு செய்து இவ்வுலகத்தாருக்கு அது பற்றி விளக்கிய முஸ்லிம் அல்லாத அறிஞர் என்ற பெருமையும் அவரைச் சார்கின்றது.

நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களது காலத்தில், இஸ்லாத்தை தழுவாதபோதும், இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் ஆதரவாக நபியவர்களின் சிறிய தந்தையான அபூ தாலிப் இருந்தார். இவ்வாறானவர்கள் இப்போதும் உள்ளனர். நீதிபதி வீரமன்த்ரி அவ்வாறான ஒருவரே.

இலங்கை முஸ்லிம்கள் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இருப்பதனால், இவ்வாறான அபூதாலிப்களை அதிகமதிகம் உருவாக்க வேண்டிய தேவைப்பாட்டில் உள்ளனர். நீதிபதி வீரமன்த்ரியின் இழப்பால் கவலையடைந்திருக்கும் அவரது குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த ஆறுதல்கள்!

2 comments:

  1. I very sad of your demise. Insha Allah if you had little bit of belive of Allah in your heart, that will definitely help you in the next World

    ReplyDelete

Powered by Blogger.