Header Ads



"யாருமே கண்டிராத கண்ணியத்தை, அடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்"

அல்லாஹ் இஸ்லாமை ஓங்கச் செய்து, நபியும் முஸ்லிம்களும் மக்காவை வெற்றி கொள்ளும்படி செய்தான். இதைப் பார்த்த மக்காவாசிகள் இஸ்லாமே உண்மை மார்க்கம். வெற்றி பெற இஸ்லாமைத் தவிர வேறு வழியில்லை என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொண்டனர்.

எனவே, இஸ்லாமை ஏற்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்வதற்கு ஒன்று கூடினர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஃபா மலைக் குன்றுக்கு மேல் அமர்ந்து கொண்டு இதற்காக தயாரானார்கள்.

கீழே உமர் ரளியல்லாஹு அன்ஹுஅமர்ந்து கொண்டார்கள். நபியவர்கள் மக்களிடமிருந்து இஸ்லாமிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். தங்களால் இயன்ற அளவு செவிமடுப்போம் கட்டுப்படுவோம் என மக்கள் பைஆ செய்தனர்.

‘அல்மதாக்’ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆண்களிடம் பைஆ பெற்ற பின்பு பெண்களிடம் வாங்கினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஃபாவின் மீதும், அதற்குக் கீழே உமரும் அமர்ந்திருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு விஷயமாகக் கூற அதனை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்நேரத்தில் அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா நபியவர்களிடம் வந்தார். உஹுத் போரில் வீரமரணம் எய்திய ஹம்ஜாவுடைய உடலைச் சின்னாபின்னமாக்கிய தனது செயலுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன செய்வார்களோ என்று அஞ்சியதால் தன்னை முழுதும் மறைத்துக் கொண்டு வந்தார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டீர்கள் என்று எனக்கு வாக்குத் தர வேண்டும்” என்று கூற, உமர் ரளியல்லாஹு அன்ஹுபெண்களுக்கு அதை எடுத்துரைத்தார்கள். அடுத்து, “நீங்கள் திருடக் கூடாது” என்றார்கள். அதற்கு, “அபூஸுஃப்யான் ஒரு கஞ்சன். நான் அவருடைய பொருளில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாமா?” என ஹிந்த் வினவினார். “நீ எதனை எடுத்துக் கொண்டாயோ அது உனக்கு ஆகுமானதே” என்று அபூஸுஃப்யான் கூறினார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவர்களின் உரையாடலைக் கேட்டு புன்னகை புரிந்து “கண்டிப்பாக நீ ஹிந்த் தானே” என்றார்கள்.

அதற்கவர் “ஆம்! நான் ஹிந்த்தான். சென்று போன என்னுடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வும் தங்களை பொறுத்தருள்வான்!!” என்று கூறினார்.

“நீங்கள் விபசாரம் செய்யக் கூடாது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

“ஒரு சுதந்திரமானவள் விபச்சாரம் புரிவாளா?” என ஹிந்த் ஆச்சரியப்பட்டார்.

“உங்களின் பிள்ளைகளை நீங்கள் கொல்லக் கூடாது” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அதற்கு ஹிந்து, “நாங்கள் எங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்த்தோம் அவர்கள் பெரியவர்களானதும் நீங்கள் அவர்களைக் கொன்று குவித்தீர்களே! என்ன நடந்தது என்று உங்களுக்கும் அவர்களுக்கும்தான் தெரியும்” என்று கூறினார்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து சிரித்து மல்லாந்து விழுந்தார். அதைக் கண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புன்னகைத்தார்கள்.

ஹிந்த் இவ்வாறு கூறக் காரணம்: பத்ரு படைக்களத்தில் அவருடைய மகன் ஹன்ளலா இப்னு அபூ ஸுஃப்யான் கொல்லப்பட்டிருந்தார். அடுத்து, “நீங்கள் அவதூறு கூறலாகாது” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறவே, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவதூறு கூறுதல் மிகக் கெட்ட பண்பாகும். நீங்கள் நல்லவற்றையும், நற்குணங்களையுமே எங்களுக்கு கூறுகிறீர்கள்!” என ஹிந்த் பதிலுரைத்தார்.

“நீங்கள் நல்ல விஷயங்களில் எனக்கு மாறு செய்யக் கூடாது” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறவே, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! தங்களுக்கு மாறுபுரியும் எண்ணத்தில் நாங்கள் இங்கு அமர்ந்திருக்கவில்லை” என்று ஹிந்த் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின் வீடு திரும்பிய ஹிந்த் வீட்டினுள் வைத்திருந்த சிலைகளைப் பார்த்து “நாங்கள் இதுவரை உங்களால் ஏமாற்றப்பட்டிருந்தோம்” எனக் கூறியவாறு அவற்றை உடைத்தெறிந்தார். (நூல்: ‘அல்மதாக்’ -மதாக்குத் தன்ஜீல்)

ஹிந்த்தை பற்றி ஸஹீஹுல் புகாரியிலும் ஒரு நிகழ்ச்சி பதியப்பட்டுள்ளது. “ஹிந்த் நபியவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இவ்வுலகில் யாருமே பெற்றிராத கேவலத்தை உங்களைச் சார்ந்தவர்கள் பெற வேண்டும் என நான் ஒரு காலத்தில் பிரியப்பட்டேன். இன்று, இவ்வுலகில் யாருமே கண்டிராத கண்ணியத்தை தாங்கள் அடைய வேண்டும் என மிக ஆசைப்படுகிறேன்” என்று கூறினார்.

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்னும் என்ன சொல்லப் போகிறாய்?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். அவர் “அல்லாஹ்வின் தூதரே! அபூ ஸுஃப்யான் கஞ்சராக உள்ளார். அவருடைய செல்வத்திலிருந்து என் பிள்ளைகளுக்கு உணவளித்தல் குற்றமாகுமா?” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “அதனை நன்மையாகவே கருதுகிறேன்” என்று கூறினார்கள்.

No comments

Powered by Blogger.