முஸ்லிம்கள் என்னை விமர்சிக்கின்றனர் - விக்னேஸ்வரன்
முஸ்லிம்களை நான் ஒரு போதும் பிரித்துப் பார்க்கவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் சனிக்கிழமை வடமாகாண முதலமைச்சரை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்த போது கருத்து தெரிவிக்கையிலேயே வடமாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
வட மாகாணத்திற்கான களப் பயணத்தினை மேற் கொண்ட கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் வட மாகாண முதலமைச்சரையும் சந்தித்தனர்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர். நாம் ஒரு போதும் முஸ்லிம்களை பிரித்துப்பார்க்க வில்லை. ஆனால் என்னை முஸ்லிம்களின் விரோதியாக சிலர் காட்டுகின்றனர்.
வடமாகாணத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள முடியும். யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறியுள்ளனர்.
மேலும் மீள்குடியேற உள்ளவர்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற முடியும். அதற்கு நாம் எந்த தடையும் கிடையாது. முஸ்லிம் மக்கள் எமது சகோதரர்கள். நாம் தமிழ்–முஸ்லிம் ஒற்றுமையை ஊக்குவிக்கின்றோம்.
வடமாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் அவர்களின் பிரச்சினைகளை, அவர்களுக்கான தேவைகளை எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் நான் அவற்றுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க ஆயத்தமாக இருக்கின்றேன்.
முஸ்லிம்கள் என்னை நிகழ்வுகளுக்கு அழைத்தால் நான் நிச்சயம் செல்லத்தயாராக இருக்கின்றேன். அவ்வாறில்லாமல் என்னை அழைக்காமல் விட்டு விட்டு, நான் முஸ்லிம்களின் நிகழ்வுகளுக்கு செல்வதில்லை என விமர்சனம் செய்கின்றனர்.
என்னை வடமாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் வந்து சந்திக்கலாம். அவர்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் என்னோடு கலந்துரையாடலாம்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியிலிருந்து வந்து என்னை சந்தித்ததையிட்டு ஊடகவியலாளர்களான உங்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்னையும் முஸ்லிம்களையும் தூரப்படுத்தி அதில் அரசியல் இலாபம் தேடவும் சிலர் முயற்சிக்கின்றனர். வடமாகாணத்திலுள்ள முஸ்லிம்களுக்கும் எனக்கும் ஒரு இணைப்பு பாலமாக செயற்படுவதற்காக உங்களுடைய கோரிக்கையை ஏற்று ஒரு முஸ்லிம் சகோதரரை ஒரு இணைப்பாளராக நியமிக்க நான் ஆயத்தமாக இருக்கின்றேன். அத்தோடு உங்கள் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்திலுள்ள பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகள், உலமாக்கள், முஸ்லிம் முக்கியஸ்தர்களையும் நான் சந்திக்க, தயாராக இருக்கின்றேன் என்றார்.
இதன்போது காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள், வடமாகாணத்திற்கான களப்பயணத்தின் போது அவதானிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் முசலி பிரசேதச செயலாளர் பிரிவிலுள்ள மறிச்சக்கட்டி மற்றும் பாலைக்குழி போன்ற கிராமங்களில் மீள் குடியேறிய முஸ்லிம்கள், வில்பத்து காணி விவகாரம் மற்றும் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கான வீட்டுப்பிரச்சினை, அவர்களின் நிலைவரம் போன்ற விபரங்களையும் வடமாகாண முதலமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.
இந்த சந்திப்பில் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கலந்து கொண்டதுடன், இந்த சந்திப்புக்கான ஏற்பாட்டினை அவரே மேற் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment