மோடியின் செய்தியுடன் வந்த தரன்ஜித்சிங் – மங்களவுடன் சந்திப்பு
சிறிலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவராக பொறுப்பேற்றுக் கொண்ட தரன்ஜித் சிங் சந்து, நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தரன்ஜித் சிங் சந்து நேற்று முன்தினம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தமது நியமனப் பத்திரங்களை கையளித்து, முறைப்படி சிறிலங்காவுக்கான தூதுவராக பதவியேற்றுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையிலேயே நேற்று அவர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை முதல் முறையாக சந்தித்து பேச்சுக்களை நடத்தினார்.
இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான எந்த தகவல்களும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
எனினும், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரியவருகிறது.
சீனக்குடா எண்ணெய்க் குதங்கள் தொடர்பான விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக, புதிய இந்தியத் தூதுவருடன் பேச்சு நடத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கம் காத்திருந்த நிலையிலேயே நேற்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தியத் தூதுவராக பதவியேற்க கொழும்புக்கு வருவதற்கு முன்னர், தரன்ஜித் சிங் சந்துவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனியாக சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
புதுடெல்லியில் கடந்த 20ஆம் நாள் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
சிறிலங்காவுடனான உறவுகள் தொடர்பான இந்தியாவின் எதிர்பார்ப்புகள் மற்றும், விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாகவும் தெரியவருகிறது.
Post a Comment