நாயை அடித்து விரட்டியதற்காக, நண்பன் படுகொலை - ஹொரணையில் சம்பவம்
தனது செல்லப் பிராணியான வளர்ப்பு நாயை அடித்தமைக்காக தன்னுடன் பணிபுரியும் சக நண்பர் ஒருவரின் முகத்தை சேற்றுக்குள் புதைத்து தாக்கிக் கொலை செய்த சம்பவம் ஒன்று ஹொரணை பகுதி யில் இடம்பெற்றுள்ளது.
ஹொரணைப் பகுதியில் உள்ள மாணிக்கக்கல் அகழ்வு இடமொன்றில் தொழில் புரியும் 51 வயதான இரு பிள்ளை களின் தந்தையான நந்தன சில்வா என்பவரே இவ்வாறு அடித்து சேற்றுக்குள் முகம் புதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை பிராந்தியத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனையடுத்து கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை பொது மக்களின் உதவியுடன் பொலிஸார் கைது செய்ததாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, நேற்று முன் தினம் மாலை வேளையில் கொலை செய்யப்பட்ட நபரும் சந்தேக நபரும் இணைந்து மாணிக்கக்கல் சுரங்கம் தோண்டப்படும் பகுதியில் மது அருந்தியுள்ளனர்.
இதன்போது அங்கு சந்தேக நபர் வளர்ப்பதாக கூறப்படும் நாய் மது அருந்தும் இடத்துக்கு வந்துள்ளதுடன் அவர்கள் வைத்திருந்த சிற்றுணவை உண்ண முற்பட்டுள்ளது.
இதன்போது அதனை தடுக்கும் முகமாக நந்தன சில்வா நாயை அடித்து விரட்டியுள்ளார். இதனால் கோபமடைந்துள்ள சந்தேக நபர் நந்தன சில்வாவுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறவே சந்தேக நபர் நத்தன சில்வாவை கடுமையாக தாக்கி சுமார் 50 மீற்றர்கள் வரை இழுத்துச் சென்று சேற்றுக்குள் முகத்தைப் புதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து மாணிக்கக்கல் சுரங்கத்தின் உரிமையாளர் வீட்டுக்கு சென்றுள்ள சந்தேக நபர் தனக்கு கடந்த இரு தினங்களாக கெட்ட கனவுகள் வருவதாகவும் தனக்கு வீட்டுக்கு செல்ல பணம் தருமாரும் கோரியுள்ளார்.
இதன்போது சந்தேக நபரின் பதற்றத்தை அவதானித்துள்ள உரிமையாளர் தனது மகனை சுரங்கம் அகழ்வு இடத்துக்கு அனுப்பி மற்றைய தொழிலாளியை அழைத்து வரக் கூறியுள்ளார்.
எனினும் அவர் அங்கு சென்றபோதும் அந்த தொழிலாளியைக் காணவில்லை எனவும் இரத்தக் கறைகள் இருப்பதையும் அவதானித்து தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதன்போது சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட போது பொதுமக்களின் உதவியுடன் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன ஹெலிவிட்ட தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.
(எம்.எப்.எம்.பஸீர்)
Post a Comment