இலங்கையில் குளிர் காலநிலை தொடரும்
நாட்டில் தற்போது அதிகாலை வேளையில் நிலவும் கடுமையான குளிருடன் கூடிய காலநிலை எதிர்வரும் 17 ஆம் திகதிக்குப் பினனர் குறைவடையும் சாத்தியமுள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் கே.எச்.எம்.பிரேமலால் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது அதிகாலை வேளையில் நிலவும் குளிருடன் கூடிய காலநிலையினால் மக்கள் பெரும் அசெளகரியங்களுக்கு உட்பட்டுள்ளனர். ஏனெனில் தற்போது இந்தியாவூடாகச் செல்லும் காற்றே இலங்கைக்கும் கிடைக்கிறது. அக்காற்று குளிருடன் கூடிய உலர்காற்றாகும்.
எனினும் வழமையாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அதிகாலை வேளையில் நிலவும் வெப்பநிலை இம்முறை சற்றுக் குறைவடைந்துள்ளது. அதனாலேயே அதிகாலை வேளையில் குளிர் அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும் இந்தியாவூடாக பயணிக்கும் உலர்காற்றின் வேகம் சற்று அதிகரித்துக் காணப்படுகிறது. ஆகவே முகில் கூட்டங்களின் கருக்கட்டல் குறைவடைந்துள்ளது.
முகில் கூட்டம் இல்லாதபோது பகல் பொழுதுகளில் நிலவும் அதிகரித் வெப்பநிலை இரவில் விரைவாக மாற்றமடைந்து விடுகிறது. முகில் கூட்டம் இருக்குமாயின் பகல் பொழுதில் நிலவும் வெப்பநிலை இரவுப் பொழுதுகளில் அங்கு தங்கும். எனவே முகில் கூட்டங்களின் கருக்கட்டல் இன்மையால் அதிகாலை வேளையில் குளிர் அதிகரித்துக் காணப்படுகிறது.
எனினும் எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் காற்றின் தன்மையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே அப்போது முகில் கருக்கட்டல் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. எனவே எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சிறியளவிலான மழைபெய்வதற்கான வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும் அம்மழைவீழ்ச்சி வரட்சியை தாக்குப்பிடிக்கும் வகையில் அமையாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment