ஆக்கிரமிப்புக்குள் பொத்தானை பள்ளிவாசல், மீட்பது யார்..?
- றிசாத் ஏ காதர் -
திருக்கோயில் பிரதேசம் என்பது முற்றிலும் தமிழ் இனத்தவர்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசம். இங்கு பொத்தானை என்கின்ற முஸ்லிம்களுக்குச் சொந்தமான வயல்கிராமம் காணப்படுகின்றது.
பொத்தானை கிராமம் 260 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றை கொண்ட கிராமம். இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்பதுக்கான அடையாளமாக ஒரு “ஸியாரம்” காணப்படுகின்றது. இங்குள்ள ஸியாரத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளவர் ஒர் இறைநேசர் என்றும், அவருடைய பெயர் "அமீருள் ஜப்பாருள் ஹமதானி" அல்லது "அஸ்-சதாத் துறா-அலிஷா மாபூத்" என இருவேறாக அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இதனை அண்டியதாக மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதற்கான "ஆராய்ச்சி மரைக்கார் தைக்கா" எனும் பெயரில் பள்ளிவாசல், கொடிமரம் என்பனவும் அமையப்பெற்றுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறு பழமையான வரலாற்றுடன் தொடர்புடைய இடமொன்றில் பள்ளிவாசல் மரக்கம்புகளால் அமைக்கப்பட்டு கூரைக்கு தகடுகள் போடப்பட்டுள்ளதனை அவதானித்த போது நம்முள் கேள்விகள் எழாமலில்லை. அதற்கான காரணங்களும் இல்லாமலில்லை. இப்பள்ளிவாசல் யுத்தகாலத்தில் பலமுறை எரிக்கப்பட்டதாகவும், பின்னர் நிர்மாணிப்புச் செய்வதற்கான வசதிகள் வாய்ப்புக்கள் போதியளவாக இல்லாமையினால் அவை நடைபெறாமல் போனதாகவும் கவலையுடன் தெரிவிக்கின்றார் பரிபாலன சபைச் செயலாளர் எம்.எஸ்.அலாவுதீன்.
இவ்வாறான பல வரலாற்று சான்றுகளுடன் காணப்படும் இடம் தற்போது ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் எல்லைக் கற்கள் போட்டே அவ் ஆக்கிரமிப்பைச் செய்துள்ளது. இது விடயம் பற்றி அறிந்துகொள்வதற்காக பொத்தானை ஆராய்ச்சி மரைக்கார் தைக்கா பள்ளிவாசல் நிருவாகக் குழுவிடம் நேரில் சென்று, பல்வேறு தகவல்களையும் பெறக்கூடியதாக இருந்தது.
பொத்தானை தொடர்பாக 78 வயதுடைய எம்.எஸ்.ஆதம்லெப்பை என்பவர் கூறுகையில், தனது தந்தையுடைய மாமா “ஆராய்ச்சி மரைக்கார்” என்பவர் பொத்தானை கிராமத்தில் காடு வெட்டி நிலங்களை துப்பரவு செய்யும் போதே மேற்படி ஸியாரத்தினை அடையாளம் கண்டதாகவும், அதன் பின்னரே அவ்விடத்தில் பள்ளிவாசலை நிறுவி வணக்க வழிபாடுகளை மேற்கொண்டதாவும் தெரிவிக்கின்றார்.
அதன் பிற்பாடு தனது தந்தை அவ்விடத்தினை பராபரித்தார். பிற்பட்ட காலத்தில் பராபரிப்புச் செய்தவர் கண்ணாடிப் பரிசாரியாவார். இவர் மரணிக்கும் போது வயது 102ஆகும். கண்ணாடிப் பரிசாரி மரணித்து வெறும் 22 நாட்களேயாகும் என்றார். அவர் தன்னுடைய ஆயுளின் பெரும்பாலான பகுதியை பொத்தானை ஆராய்ச்சி மரைக்கார் தைக்காவிலே தான் செலவிட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட பொத்தானை பள்ளிவாசலினை சுற்றிக் கடந்த டிசம்பர் மாதம் (07) ஏழாம் திகதி தொல்பொருள் திணைக்களம் எல்லைக் கற்களை இட்டிருப்பதானது, மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தடைவிதிப்பதுடன், முஸ்லிம்களின் பூர்வீக வரலாறுகளை மெல்லச் சூறையாடும் செயற்பாடாகவே கருதவேண்டியுள்ளது என்கின்றார் ஆதம்லெப்பை.
மேலும் இது தொடர்பில், பொத்தானை ஆராய்ச்சி மரைக்கார் தைக்கா பள்ளிவாசலின் பரிபால சபைத் தலைவர் ஏ.எம்.ஜுனைதீன் தெரிவிக்கையில், இவ்விடமானது நாங்கள் எமது மதக் கடமையை மிக அழகாகவும், அமைதியாகவும் மேற்கொண்டு வந்த இடம், இறை திருப்தியை நாடி இப்பிராந்தியத்திலுள்ள மக்கள் நிறையவே வந்துபோகின்ற இடங்களில் இதுவும் ஒன்று. எமக்கு தெரிந்த காலங்களில் இருந்து இவ்விடம் எவ்வித பிரச்சினைகளும் இன்றி காணப்படுகின்றது. இப்பள்ளிவாசலினைச் சுற்றி இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் வயல் நிலங்கள் காணப்படுகின்றன.
வயல் வேலை நிமித்தம் வருகின்றவர்கள் தொழுவதற்கும், நேர்ச்சை மற்றும் இதர கடமைகளுக்கும் இருக்கின்ற ஒரே ஒரு இடம் பொத்தானை ஆராய்ச்சி மரைக்கார் தைக்கா மாத்திரமே.
கடந்த டிசம்பர் மாதம் ஏழாம் திகதி தொல் பொருள் திணைக்களத்தினரால் இத் தைக்காவினைச் சுற்றி பன்னிரெண்டு எல்லைக் கற்கள் இடப்பட்டுள்ளன. கிணறு அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டோம் தடுத்துவிட்டார்கள். பழைமையான கிணறு ஒன்று இருந்தது. இரவோடு இரவாக உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
யாரென்று தெரியாமலுள்ளது. இவ்விடயம் தொடர்பாக எமது அரசியற் தலைவர்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளோம். ஆனால் இதுவரை நடந்தது எதுவுமாகத் தெரியவில்லை. தற்போது நடந்துகொண்டிருப்பவைகள் என்னவென்றே புரிந்துகொள்ள முடியாதுள்ளதாக தெரிவிக்கின்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்துவிட்டு, அக்கரைப்பற்றிலிருந்து பெருந்திரளான மக்களுடன் வந்து, “ஸியாரம்” அமைந்துள்ள இத் தைக்காவிலே, ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற வேண்டுமென பிரார்த்தித்து பாற்சோறு சமைத்து வழங்கியதாக குறிப்பிடுவதுடன், அவ்வாறாக வெற்றிக்கு பங்களிப்புச் செய்த மக்களுக்கும், அவர்களது மார்க்கக் கடமைகளுக்குமா இந்த ஜனாதிபதி தடைவிதிக்கின்றார் என்கின்றார் ஜுனைதீன்.
தொடர்ந்தும் தலைவர் ஏ.எம். ஜுனைதீன் குறிப்பிடுகையில், தமது மார்க்கக் கடமைகளுக்கு தடை ஏற்படுத்தி, எமது வரலாற்று சின்னங்களை அழிக்க எடுக்கப்படும் முயற்சிக்கு வன்மையாக கண்டனத்தை தெரிவிப்பதோடு, அவற்றை மீளப்பெற்றுக்கொள்ள தமது உயிரைக்கூட இழக்கத் தயார் என்கின்றார் உணர்வுபூர்வமான கண்ணீர் மல்கலுடன்.
பௌத்த அடையாளங்களை தேடி அலைகின்ற நிகழ்வு ஒருபுறம் நடந்தேறுகின்றது. மறுபுறம் முஸ்லிம் மக்களுடைய பாரம்பரிய வணக்கஸ்தலங்களை திட்டமிட்டு தொல்பொருள் திணைக்களம் கபளீகரம் செய்கின்றது. எங்கெல்லாம் நிலங்கள் ஆக்கிரமிப்புச் செய்யப்படுகின்றனவோ அங்கெல்லாம் விலாசமிடப்படுகிறது தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமென்று.
முகவரியற்ற சிங்கள இனவாத அமைப்பு விடுத்த கோரிக்கைக்கு செவிசாய்த்து, தொல்பொருள் திணைக்களத்தின் பலம் சேர்க்கப்பட்டதால் இன்று பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கூரகல ஜெய்லானி பள்ளிவாசல் சோபை இழந்து காணப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.
பொத்தானை ஆராய்ச்சி மரைக்கார் தைக்கா பள்ளிவாசல் நிருவாகத்தினர் பேசியதில் இருந்து அவதானித்த விடயம் ஆச்சரியமிக்கதாய் இருந்தது.
பொத்தானை பள்ளியைச் சுற்றி கடந்த டிசம்பர் மாதம் ஏழாம் திகதியே தொல் பொருள் திணைக்களத்தினர் எல்லைக் கற்களையிட்டுள்ளனர். இதனை அதே சூட்டோடு அகற்றுவதுக்கான முயற்சிகளில் நமது அரசியற் தலைமைகள் ஈடுபடாதுவிடுவது -தான் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்துக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகப் பார்க்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பொத்தானை பள்ளிவாசல் விவகாரத்தில் நம்மால் காட்டப்படும் மென்மை போக்கு, முஸ்லிம்கள் செறிந்து வாழும் பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையான பிரதேசங்களில் தொல்பொருள் திணைக்களம் அவர்களது எல்லைக் கற்களை இடுவதற்கான சமிக்ஞையாகவே காணப்படும். அதற்கான காலம் வெகு தூரத்திலில்லை என்பது ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை.
தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், ஒரு சிங்கள துவேஷ, சிறுபாண்மை இனத்தின் இருப்புக்கும், அவர்களின் பாரம்பரிய நிலங்களை அபகரிக்கும் திணைக்களமாகவே செயட்படுகின்றது. இந்த திணைக்களத்துக்கு எதிராக ஜனநாயக முறையில் மாபெரும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். இவை சர்வதேசத்தின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட வேண்டும்.
ReplyDeleteஆற்றைக்கடந்தாள் அண்ணன் என்ன தம்பி என்ன ......
ReplyDeleteஏறிவந்த ஏணியை உதைத்து விடுவதுதானே வளமை ..... ஏற்றுவதற்கு முன் யோசித்திருக்க வேண்டும். ஊமை ஊரைக் கொள்ளும் என்பார்கள். என்ன செய்வது. அல்லாஹ் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுமாறு கூறுகிறான் அதைத்தான் எம்மால் உறுதியாக செய்யமுடியும்.