செல்பியினால் திருகோணமலை கடலில், மாணவியின் உயிர் பிரிந்தது
திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பள்ளித்தோழிகளுடன் செல்பி எடுக்க முனைந்த வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவி ஒருவர் கடலில் தவறி விழுந்த தனது நண்பியைக் காப்பாற்றச்சென்று மரணமான துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் பொங்கல் தினமான நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தினால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் மரணமானவர்,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் வாழைத்தோட்ட கிராமத்தைச் சேர்ந்த செல்வசிங்கம் பிரதீபா (வயது 21) என்ற மாணவியாவார்.
தனது க.பொ.த.உயர்தரத்தை வாழைச்சேனை கறுவாக்கேணி விக்கினேஸ்வராவில் கற்ற இம்மாணவி 2015 பரீட்சையில் கலைப்பிரிவில் இரண்டு ஏ ,பி சித்திகளைப்பெற்றதாகவும் கிழக்கு பல்கலைக்கழத்திற்கு தெரிவான இவர் எதிர்வரும் 19 ஆம் திகதி பல்கலைக்கழகம் செல்ல விருந்ததாகவும் இவரைக்கற்பித்த இடை நிலைப்பாடசாலை அதிபர் க.சொக்கலிங்கம் தெரிவித்தார்.
வாழைத்தோட்டத்திற்கு அருகில் உள்ள புன்னையடி கிராமத்தின் கடற்பகுதியில் அமைந்துள்ள மலைக்குன்றில் நின்று தனது இரு தோழிகளுடன் செல்பி எடுக்க முற்பட்டபோது இவரது நண்பி கால்தவறி கடலில் விழந்துள்ளார். அவரைக்காப்பாற்ற உடன் குதித்த பிரதீபாவே இறந்துள்ளார்.
கடலில் விழுந்த இருவரையும் காப்பாற்றி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டபோதும் முயற்சி பயனளிக்காமையினால் தவறி விழுந்தவரை காப்பாற்றுவதற்காக பாய்ந்த பிரதீபா உயிரிழந்ததாகவும். ஆனால் தவறி விழுந்த நண்பி உயிர் பிழைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரேத பரிசோதனைக்காக மாணவியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இவரைப்பற்றி மேலும் கருத்து வெளியிட்ட வழைத்தோட்டத்திற்கு அருகில் உள்ள துவாரகா வித்தியாலய முன்னாள் அதிபர் சொக்கலிங்கம் குறிப்பிடுகையில்,.
குறித்த மாணவியின் குடும்பத்தினர் மிகவும் வறியவர்கள் என்பதுடன் இம்மாணவி ஆரம்பக்கல்வியை வழைத்தோட்டப்பாடசலையில் கற்றுவந்த நிலையில் க.பொ.த(சா.த)த்தில் கல்வி கற்க எமது துவாரகா வித்தியாலத்தில் இணைந்தார். இவர் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்து அகில இலங்கை ரீதியில் ஓட்டங்களில் சாதனைப்படைத்த திறமைசாலியாவார்.
இந்நிலையில் சிறந்த பெறுபேற்றை க.பொ.த சாதரண தரத்தில் பெற்ற இவர் வாழைச்சேனை சென்று கறுவாக்கேணி விக்னேஸ்வராவில் க.பொ.த. உயர்தரத்தில் உறவினர்களின் வீட்டில் தங்கி நின்று கற்று சிறந்த பெறுபேற்றை பெற்ற நிலையில் பல்கலைக்கழத்திற்கு நுழைவதற்கான சகல ஏற்பாட்டையும் பூரத்தி செய்திருந்தார். எதிர் வரும் 19ஆம்திகதி பல்கலைக்கழகம் செல்ல விருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். சுனாமி மற்றும் யுத்தத்தினால் மிகவும் பாதிப்புக்களைச்சந்தித்த இக்கிராமம் மீள முயற்சிக்கையில் எட்டாக்கனியான பட்டதாரியை கிராமம் இழந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
வாழைச்சேனையில், இவரது க.பொ.த. உயர்தர வகுப்பின் வகுப்பாசிரியராகவிருந்த அ.சூரிய காந்தன் குறிப்பிடுகையில், இந்த மாணவி மிகவும் அமைதியானவர் என்பதுடன் சமூக நெறிபிறழ்வில்லாதவர்.
இக்காலத்தில் இவ்வாறானவர்களை காண்பது குறைவாகும். பிரத்தியேகமாக இசைத்துறையிலும், விளையாட்டிலும் ஆர்வமுள்ளவர். பல போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களை பெற்றவர். நான் அவருக்கு கற்பிக்க வில்லை. ஆனால் வகுப்பாசிரியராக கடமையாற்றியுள்ளேன். அவரது உயர் கல்வியைக்கற்பதிலும் வறுமை காரணமாக சிரமப்பட்டே கற்று 2 ஏ,பி சித்தியை 2015இல் பெற்றிருந்தார் எனவும் குறிப்பிட்டார்.
Post a Comment