'வட - கிழக்கு இணைப்பு, தற்போது முடியாது' - ரிஷாட்
வடக்கு மற்றும் கிழக்கு இணைப்புத் தொடர்பில் இப்போது சிந்திக்க முடியாது என தெரிவித்துள்ள வர்த்தக கைத்தொழில் துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பல்வேறு கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் அரசியல் ரீதியாக ஒன்றிணைய முடியாது. மாறாக பொருளாதார ரீதியில் மக்களுடைய அபிவிருத்திக்காக ஒன்றிணைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு, யாழ். பொது நூலகத்தில் நேற்று (27) நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது அரசியல் தலைமைகள் மக்களுடைய அபிவிருத்திக்காக அமைச்சர் உரையாற்றியிருந்தார்.
இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பு குறித்து ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யுத்தம் காரணமாக இந்தியாவுக்குச் சென்று இங்கு திரும்ப முடியாதுள்ள மக்களை இங்கு மீள் குடியேற்றுவது, பன்னிரண்டாயிரம் முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவது, பொருளாதரத்தை கட்டியெழுப்புவது, வீடுகள் இல்லாமல் வறுமைப்படும் மக்கள், தொழில் இல்லாமல் கஸ்ரப்படும் ஏனைய மக்கள், இவர்களுக்கு ஒரு வழியேற்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
வடக்கு மாகாண சபையின் நடவடிக்கையை பார்த்தால் வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பை கோர முடியாது போன்று தான் உள்ளது. எமது கட்சியின் கொள்கையும் இது தான். வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பு தொடர்பில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உள்ளது. ஆனால், இது தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்போ, அல்லது தமிழரசு கட்சியோ யாருடனும் பேசவில்லை. எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தான் நாம் இப்போது கூறியிருக்கின்றோம்.
நான் அழைப்பு விடுத்தது, பொருளாதார ரீதியாக வடக்கு கிழக்கு மக்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதே! கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்காக அவர்களின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய கடமை உண்டு. இதற்காக தான் பொருளாதார ரீதியில் அந்த மக்களை கட்டியெழுப்ப வேண்டிய அவசியமும் உண்டு.
முதலில் மக்களுடைய கண்ணீரை துடைக்கும் வேலையை நாம் அரசியலுக்கு அப்பாற்பட்டு செய்ய வேண்டும். ஒவ்வொரு கட்சியும் மக்களுக்கு இதை தெரிவித்துதான் வாக்கினை பெற்றார்கள். இந்த ஆணையை ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு மாதிரி தான் வழங்கியிருந்தது. இது கட்சியின் நிலைப்பாடுகளாகவும் இருந்தது. ஆகவே, இந்த நிலைபாட்டில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
எஸ். நிதர்ஸன்
Post a Comment