'முஸ்லிம் சமூகம் தற்பொழுது எந்நிலைக்குச் சென்றுள்ளது என ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்' - சம்பிக்க
சார்பு அரசியலை மேற்கொள்ள முயற்சிப்பதாலேயே சுமந்திரன் போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கொல்வதற்கான முயற்சிகள் எதிர்த்தரப்பினரால் மேற்கொள்ளப்படுகின்றன என பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பிரிவினைவாதத்தின் பின்னால் செல்வதானது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் மேலும் பின்னோக்கியே நகர்த்திச் செல்லும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். தினகரனுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார்.
இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றோர் அரசாங்கத்துடன் சார்பான அரசியலை முன்னெடுப்பதாலேயே அவர்களுக்கு எதிரானவர்கள் கொல்வதற்கு முயற்சிக்கின்றனர். தமிழ்த் தலைவர்களான நீலன் திருச்செல்வம் மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோருக்கும் இதுவே நடந்தது. இவ்வாறான நிலையில் விக்னேஸ்வரனுக்கும் இவ்வாறான நிலைமையே ஏற்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி பிரிவினை வாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து நெடியவன் போன்றவர்கள் இலங்கையில் படுகொலை முயற்சிகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கும் ஐரோப்பிய ஒன்றியமும் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் கூறினார்.
1970களில் தமிழ் சமூகம் கல்வி, பொருளாதார நிலைமை ஆகியவற்றில் உயர்ந்த நிலையில் இருந்தன. பிரபாகரன் பிரிவினைவாத யுத்தத்துக்கு இட்டுச் சென்ற பின்னர் தமிழ் மக்களின் நிலைமையை பார்க்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தினரும் மலையக சமூகமும் தற்பொழுது எந்நிலைக்குச் சென்றுள்ளனர் என்பதை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். மீண்டும் தமிழ் மக்கள் பிரிவினை வாதத்தின் பின்னால் சென்றால் ஒட்டுமொத்த தமிழ் சமூகம் மீண்டும் பின்னோக்கியே செல்லும்.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு 70ற்கும் அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வந்த போதும், அங்கு முன்னெடுக்கப்பட்ட சில ஹர்த்தால்கள் காரணமாக முதலீட்டாளர்கள் பின்வாங்கியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
Post a Comment