திணறும் முஸ்லிம் நாட்டு விமான நிறுவனங்கள்
இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் 7 நாட்டைச் சேர்ந்த மக்கள் 90 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய டொனால்ட் டிரம்ப் தடை விதித்திருப்பதால், வளைகுடாவைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் தடுமாறத் தொடங்கியுள்ளன.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை டொனால்ட் டிரம்பின் உத்தரவு பல இஸ்லாமிய நாடுகளை அதிர வைத்தது. அதாவது லிபியா, ஈராக், சோமாலியா, சூடான், சிரியா, ஏமன், ஈரான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் 90 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்பின் இந்தத் தடையால் பல விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பல விமான நிறுவனங்களில் தடை விதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பைலட்டுகள், பணிப் பெண்களாக, டெக்னிக்கல் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். டிரம்பின் புதிய உத்தரவால் பல விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு இயக்கும் விமானிகளின் பைலட்டுகள் முதல் பணிப்பெண்கள் வரை பலரையும் மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
வளைகுடா நாடுகளின் மிகப் பெரிய விமான சேவை அளிக்கும் நிறுவனம் எமிரேட்ஸ். துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 11 நகரங்களுக்கு விமான சேவையை அளித்து வருகிறது. மார்ச் மாதத்தில் 12-வது நகருக்கு விமான சேவையை அளிக்க உள்ளது.
இந்த நிறுவனத்தில் 23 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அதில் 4 ஆயிரம் பேர் பைலட்டுகள். டிரம்பின் உத்தரவையடுத்து அமெரிக்காவுக்கான விமான சேவையில் தடை விதிக்கப்பட்ட 7 நாடுகளைச் சேர்ந்த பைலட்டுகள், பணிப்பெண்கள் பணியாற்றினால் அவர்களை மாற்றி அனுப்புவதாக எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா செல்லும் விமானங்களில் ஐரோப்பியர்கள், ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை பைலட்டுகளாகவும் பணிப் பெண்களாகவும் அனுப்பி வருவதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து எமிரேட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ''டிரம்பின் உத்தரவுக்கு ஏற்ற வகையில் எங்கள் விமானக்குழுவில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்'' என்றார். அபுதாபியைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் எதியாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் உடனடியாக இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அமெரிக்காவுக்கு செல்லும் பயணிகள் 'கிரீன் கார்டு' அல்லது முறையான விசா இருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு பயணிகளுக்கு தனது இணையதளத்தில் அறிவுறுத்தியுள்ளது.
டொனால்ட் டிரம்பின் இந்த உத்தரவு விமானத்துறையே ஸ்தம்பிக்க வைத்து விடும் என்கிற கருத்து எழுந்துள்ளது. பல விமான நிறுவனங்களை 90 நாட்களில் நஷ்டத்தைச் சந்தித்து விடலாம். கடந்த 2015-ம் ஆண்டு மட்டும் ஈரானில் இருந்து 35 ஆயிரம் பேர் அமெரிக்காவுக்கு பயணித்துள்ளனர். டிரம்பின் உத்தரவால் அடுத்த நாளே எமிரேட்ஸ் விமானத்தில் பயணிகள் கூட்டம் குறையத் தொடங்கியிருக்கிறது. ஈரான், ஈராக் நாட்டைச் சேர்ந்த பல பயணிகள் அமெரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளனர்.
பாகிஸ்தானியர்களுக்கும் விசா கெடுபிடிகளையும் டிரம்ப் விதித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து இம்ரான்கான் கூறுகையில், ''டிரம்பின் முடிவு, பாகிஸ்தானியர்களை தங்கள் சொந்த தேசத்தின் வளர்ச்சிக்கு உதவச் செய்துள்ளது. நமது நாட்டை வளமுள்ளதாக மாற்றுவோம். ஈரான் பாணியில் அமெரிக்கர்களை நம் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்க வேண்டும்'' என்றார்.
Post a Comment