சவூதியில் ஹஜ் + உம்ராவை கையாள, இலங்கை தூதரகத்தில் தனி பிரிவு
இலங்கையின் ஹஜ் ஏற்பாடுகளை சீரமைப்பதற்காக சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் ஹஜ் உம்ரா விவகாரங்களுக்கென தனியான ஒரு பிரிவினை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சு முன்னெடுத்து வருகிறது.
தற்போது தயாரிக்கப்பட்டு வரும் சட்ட மூலத்தில் இவ்விடயம் உள்ளடக்கப்படவுள்ளது. வெளிநாடுகளில் இயங்கி வரும் எமது நாட்டு தூதரகங்களில் தொழில் பிரிவு (LABOUR SECTION) என்று ஒன்று நிறுவப்பட்டுள்ளது போன்று சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் ஹஜ், உம்ரா விவகாரங்களுக்கு தனியான பிரிவு நிறுவப்படவுள்ளது.
இது விடயம் தொடர்பில் அரச ஹஜ் குழுவின் உறுப்பினரும் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தாபல் சேவைகள் அமைச்சின் பிரத்தியேக செயலாளருமான எம்.எச்.எம்.பாஹிம் கருத்து தெரிவிக்கையில், “ஹஜ் உம்ரா ஏற்பாடுகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கும், சேவைகளை விரிவு படுத்துவதற்குமாகவே இவ்வாறான தனியான பிரிவொன்றை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. ஹஜ் சட்டம் ஒன்றின் மூலம் இப்பிரிவு நிறுவப்படவுள்ளதால் அதன் உத்தியோகத்தர்கள் சவூதியில் இருந்து கொண்டே இலங்கையில் ஹஜ் குழுவுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி பணிகளை துரிதப்படுத்த முடியும்.
ஹஜ் சட்டம் மூலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும் ஹஜ் சட்ட வரைபுகளைத் தயாரிப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூபின் வேலைப்பளு காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சட்டமூலத்தில் மேலும் பல முன்னேற்றமான ஹஜ், உம்ரா தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.”
ஹஜ் கோட்டா
கடந்த வருடம் சவூதி ஹஜ் அமைச்சினால் இலங்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட 2800 கோட்டாவில் 20% குறைத்தே வழங்கப்பட்டது. உலக நாடுகள் அனைத்தினதும் கோட்டா 20% குறைக்கப்பட்டது. இவ்வருடம் நிர்ணயிக்கப்பட்டுள்ள 2800 கோட்டாவையும் பெற்றுக் கொள்வதற்கு சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையின் கௌன்சிலர் ஜெனரல் பைசல் மக்கீன் கடந்த வாரம் ஹஜ் அமைச்சு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எமக்கு 2800 கோட்டா இவ்வருடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.2800 க்கும் மேலதிகமான கோட்டா வழங்குமாறு சவூதி ஹஜ் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கோரவுள்ளார். இதற்காக சவூதி ஹஜ் அமைச்சரை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சந்திப்புக்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.
இவ்வருட ஹஜ் ஏற்பாடு
ஹஜ் ஏற்பாடுகளுக்கான சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஹஜ் ஏற்பாடுகள் கடந்த வருடம் போன்றே முன்னெடுக்கப்படும். உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஹஜ் வழிமுறைகளின் (GUIDE LINES) படி ஹஜ் முகவர்கள் தேர்வு, கோட்டா பகிர்வு முன்னெடுக்கப்படும்.ஹஜ் சட்டமூலம் விரைவு படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டால் புதிய சட்டத்தின் படியே ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றார். இதேவேளை கடந்த வருடம் ஹஜ் முகவர்கள் சிலரால் கோட்டா பகிர்வு முறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ARA.Fareel
Post a Comment