பயங்கரவாதிகளுக்கு எதிராக துருக்கியும், ரஷ்யாவும் இணைந்து விமானத் தாக்குதல்
சிரியாவில் (ஐ.எஸ்) குழுவுக்கு எதிராக ரஷ்யா மற்றும் துருக்கி ஒன்றிணைந்து கூட்டு வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
அலெப்போ மாகாணத்தின் புறநகர் பகுதியான அல் பாபில் ஐ.எஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இங்கு கடந்த மாதம் துருக்கி இராணுவம் தரைவழியாக போரிட்டபோது கடும் இழப்புகளை சந்தித்தது.
துருக்கியுடன் ஒருங்கிணைந்து ரஷ்யா வான் தாக்குதலை நடத்தியதாக துருக்கி இராணுவம் ரோய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டுள்ளது. சிரியாவின் ஐந்து ஆண்டு சிவில் யுத்தத்தில் துருக்கி மற்றும் ரஷ்யா எதிர் எதிர் தரப்புகளுக்கு ஆதரவளித்து வருகின்றன.
சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு ஆதரவாக 2015 தொடக்கம் ரஷ்யா தலையிட்டிருப்பதோடு துருக்கி அஸாத் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி உதவிகளை வழங்கி வருகிறது.
கடந்த புதனன்று இடம்பெற்ற கூட்டு வான் தாக்குதலில் ஒன்பது ரஷ்ய விமானங்களும் எட்டு துருக்கி விமானங்களும் பங்கேற்றதாக ரஷ்ய இராணுவம் குறிப்பிட்டது. இதன்போது 36 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டபோதும் அது குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
துருக்கி எல்லையில் இருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் அல் பாப் சிறு நகரை கைப்பற்ற துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.
Post a Comment