'கவலையற்றிருக்கும் முஸ்லிம் தலைமைகள்'
-விடிவெள்ளி-
சிறுபான்மையினரின் அமோக ஆதரவினால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பௌத்த இனவாதிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒருவராக தன்னை மாற்றியமைத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த இனவாத அமைப்புக்களும், இனவாத பௌத்த குருமார்களும் மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிக்க வேண்டுமென்று கடுமையாக எதிர்ப்புப் பிரசாரங்களை மேற்கொண்டார்கள். இந்த நாட்டை மஹிந்த ராஜபக்ஷதான் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டுமென்றும் தெரிவித்தனர். ஆயினும், பௌத்த இனவாதிகளின் முயற்சியை சிறுபான்மையினர் பெரும்தொகையாக வாக்குகளை அளித்து முறியடித்தார்கள்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான் இத்தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் மண்ணுக்குள் புதையுண்டு இருப்பேன் என்று தெரிவித்திருந்தார். அந்தளவிற்கு அவரின் தோல்வியின் எதிர்த் தாக்கம் அமைந்திருக்கும். இந்த ஆபத்திலிருந்து இன்றைய ஜனாதிபதியை காப்பாற்றிய பெருமை சிறுபான்மையினருக்கே சாரும். இவ்வாறு சிறுபான்மையினர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற வேண்டுமென்று முடிவு செய்தமைக்கு காரணம் சிறுபான்மையினருக்கு எதிராக பௌத்த இனவாதிகள் மேற்கொண்ட அடாத்தான நடவடிக்கைகளாகும்.
குறிப்பாக முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைய வேண்டும். அப்போதுதான் தங்களுக்கு எதிரான நிந்தனைகள் இல்லாமல் போகுமென்று நம்பினார்கள். ஆனால், இன்று சிறுபான்மையினரின் இந்த நம்பிக்கை வீணாகிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தோல்வியடைய வேண்டுமென்று பொதுபல சேனவும், அதன் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் மற்றும் பௌத்த கடும் போக்கு அமைப்புக்களும் கடும் முயற்சிகளை எடுத்துக் கொண்டார்கள். மட்டுமல்லாது ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும் மைத்திரிபால சிறிசேனவிற்கும், அரசாங்கத்திற்கும் எதிரான போராட்டங்களை மேற்கொண்டார்கள்.
பொது பலசேனவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக் ஷவை சந்தித்ததன் பின்னர் இனிமேல் நாங்கள் போராட்டங்களில் ஈடுபடமாட்டோம் என்று அறிவிப்பு செய்தார். அவர் விடுத்த அறிவிப்பின் பின்னணியை இன்று எம்மால் உணரக் கூடியதாக உள்ளது. மட்டக்களப்புக்கு நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக் ஷ ஞானசார தேரர் மற்றும் கடும்போக்கு இனவாத தேரர்கள் சகிதம் வருகை தந்தார். அவர் மட்டு-. நகரில் அம்பிட்டிய சுமணரத்தின தேரரை சந்தித்தமை, இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களை ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபடுத்திப் பேசியமை யாவும் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நடந்து கொண்டிருப்பதாகவே உள்ளது.
அரசாங்கத்தின் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக பௌத்த இனவாத தேரர்களினதும், இனவாதப் போக்குடைய அரசியல்வாதிகளுடனும் ஜனாதிபதியும், அரசாங்கமும் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு விசேட ஏற்பாடுகளைச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக் ஷ, சிறுகைத்தொழில் அமைச்சர் தயாகமகே, ஞானசார தேரர், மட்டு நகர்- மங்களராமய அம்பிட்டிய சுமனரத்தின தேரர் ஆகியோர்கள் சகிதம் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, வில்பத்து வனப் பிரதேசத்தை விஸ்தரிப்பதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனவாதிகளின் சிந்தனைக்குள் அகப்பட்டு விட்டாரோ என்ற பதிவு சிறுபான்மையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் நிலங்களை தொல்பொருள் பிரதேசம் என்ற அடிப்படையில் ஆக்கிரமிப்பு செய்வதற்கே அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வில்பத்து வனப் பிரதேசத்தை விரிவாக்கம் செய்யும் போது, இதனைச் சூழ உள்ள முஸ்லிம் கிராமங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. சிறுபான்மையினரை முற்று முழுதாக அடிமைகள் போன்று நடாத்துவதற்கு பௌத்த இனவாதிகள் நீண்ட காலமாக திட்டங்களை வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இதனைச் செய்வதற்கு அரசாங்கம் முன் வர வேண்டுமென்று காலத்திற்கு காலம் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களை வலியுறுத்தி வந்துள்ளார்கள். இவர்களின் இத்திட்டத்தை நேரடியாகச் செய்வதற்கு எந்த அரசாங்கமும் முன் வரவில்லை. மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கம் இவர்களின் திட்டத்தை நேரடியாக செய்வதற்கு முன் வராத போதிலும், பௌத்த இனவாதிகளின் நடவடிக்கைகளை கண்டும் காணாதது போல் இருந்தது. ஒரு சில அமைச்சர்கள் பின்புலமாக இருந்தும் செயற்பட்டார்கள். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ பொது பலசேனாவின் பின்னணியில் செயற்பட்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இன்றைய அரசாங்கம் மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தை விடவும் ஒரு படி மேலே சென்று பௌத்த கடும் போக்கு இனவாத தேரர்களின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன் வந்துள்ளது. இந்த ஆபத்திலிருந்து முஸ்லிம்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட வேண்டும்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு பலத்த அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் அதனையிட்டு கவலை கொள்ளாதவர்களாகவே அவர்கள் உள்ளனர். முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது வேறு செயற்பாடுகளில் ஒருவரை ஒருவர் வீழ்த்தும் நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளார்கள். முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் பாதுகாப்பில் மாற்றுத் தரப்பினர் நன்மை அடைந்து விடக் கூடாதென்பதற்காக சமூகம் பற்றிய கலந்துரையாடல்களில் கூட கலந்து கொள்ளாமல் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்தில் உள்ள வரை முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது.
கடந்த வாரம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. வில்பத்து வனப் பிரதேசத்தை விஸ்தரிப்பு செய்வதனால் முஸ்லிம்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்துப் பற்றிப் பேசுவதற்கே இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
முஸ்லிம் சமூகத்தின் இருப்பு பற்றிய கலந்துரையாடலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் இதில் அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்மை அடைந்து கொள்ளக் கூடாது என்பதனைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது. சில வேளை இதனை விடவும் வேறு காரணிகள் இருக்கலாம். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு பிரிந்து கட்சி, பிரதேசம் என்று செயற்பட்டுக் கொண்டிருப்பதனால்தான் முஸ்லிம்கள் பல துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமைப்பட வேண்டுமென்று சமூகம் விரும்புகின்றது. ஆனால், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவதாகத் தெரியவில்லை.
இதே வேளை, முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் சோர்ந்து போய்க் கிடக்கின்றன. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை வழிப்படுத்தும் வேலைத் திட்டத்தை முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அகில இலங்கை ஜம்மிய்யத்துமல் உலமா சபை இந்த விடயத்தில் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும். முஸ்லிம் சிவில் அமைப்புக்களுக்கு தலைமை வகித்து முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை நிச்சயப்படுத்திக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகளின் இந்த நிலை குறித்து முஸ்லிம் சமூகமும் பேசாதிருக்கின்றது. ஒரு சமூகம் தமது தலை விதியை மாற்றியமைப்பதற்கு முன் வராத போது, அச்சமூகத்தின் தலை விதியை அல்லாஹ்வும் மாற்றியமைக்க மாட்டான். ஆதலால், முஸ்லிம் சமூகம் இன்று ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஆபத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்குரிய சுயபாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும். ஒற்றுமைப்படுமாறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்த வேண்டும். மறுக்கும் அல்லது ஒத்துழைக்காத பாராளுமன்ற உறுப்பினர்களை அடுத்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். இத்தகையோரை தோற்கடிக்காத வரை முஸ்லிம்கள் ஈடேற்றம் பெற முடியாது.
Post a Comment