முஸ்லிம்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை - ஹலீம்
வில்பத்துவில் தங்களது பூர்வீகக் காணியில் குடியேறியுள்ள மக்களை அகற்ற முடியாது. வில்பத்து வனப்பிரதேசம் விஸ்தரிக்கப்படுவதென்றால் அவர்களுக்கு வேறு இடங்களில் காணி வழங்கப்பட வேண்டும் என அனைத்து மதங்களினதும் அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கூரகல மற்றும் வில்பத்து விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடுவதெனவும் அஸ்கிரிய மற்றும் மகாநாயக்க தேரர்களைச் சந்திப்பதெனவும் இணக்கம் காணப்பட்டது.
நேற்று மதியம் நீதியமைச்சில் நீதியமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜேதாச ராஜபக்ஷவின் தலைமையில் அனைத்து மதங்களுக்குமான அமைச்சர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் முஸ்லிம் சமய விவகாரம் மற்றும் தபால், தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், இந்துசமய மீள் குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். கிறிஸ்தவ மதம், சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க, தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இனங்களுக்கிடையே நிலவும் சந்தேகங்கள், பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டன. அரசாங்க திணைக்களங்களிலும் நிறுவனங்களிலும் சிங்கள மொழியில் மாத்திரம் கடமைகள் மேற்கொள்வதால் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டதையடுத்து அரசாங்க திணைக்களங்களிலும் நிறுவனங்களிலும் கருமங்கள் தமிழ்மொழியிலும் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள் பற்றி அமைச்சர் எம்,எச்,ஏ.ஹலீம் விளக்கினார். கடந்தகால அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கெதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதும் முஸ்லிம்கள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிட்டது, பாதுகாப்பு கிடைத்துவிட்டது என்று சந்தோஷமடைந்தனர். ஆனால் அச்சந்தோஷம் நீடிக்கவில்லை.
மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள், சவால்கள் என்பன தோற்றம் பெற்றுவிட்டன. இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் எமது நாட்டு முஸ்லிம்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று வெளியிடப்பட்ட கருத்துகள் முஸ்லிம் மக்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு வழியமைத்து விட்டது. முஸ்லிம்களை ஏனைய சமூகத்தினர் தவறான கருத்துடன் நோக்குகிறார்கள்.
முதலில் எமக்கிடையேயான சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் பிரதான அமைப்பான உலமா சபை சந்தேகங்கள் ஏதும் இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளது. எனவே இனங்களுக்கிடையில் நிகழும் சந்தேகங்கள் முதலில் தீர்க்கப்பட வேண்டுமென்றார்.
Post a Comment